ஆத்துார்:''தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சொல்வது போல் நான் ஒன்றும் மந்திரவாதி இல்லை. தமிழக மக்களுக்கு திட்டங்களை செயல்படுத்தும் செயல்வாதி,'' என, முதல்வர், இ.பி.எஸ்., பேசினார்.சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, செல்லியம்பாளையத்தில் நேற்று, அ.தி.மு.க., மகளிர் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், முதல்வர்இ.பி.எஸ்., பேசியதாவது:தேர்தல் நேரத்தில், ஓட்டுக்காக திட்டங்களை அறிவிக்கவில்லை. மக்களின் சூழ்நிலையை அறிந்து, பொங்கல் பரிசு போன்ற திட்டங்களை அறிவித்தோம். இதை கூட தடுக்க ஸ்டாலின் முயற்சித்தார். மனுக்களை வாங்குகிறோம் என்ற பெயரில், மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின்.ஸ்டாலினின் சாயம் தற்போது வெளுத்து விட்டது; மக்கள் இனி ஏமாற மாட்டார்கள். தி.மு.க., ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, எந்த அடிப்படை வசதிகளையும் செய்யாதவர் ஸ்டாலின். அவர், நாட்டில் என்ன நடக்குது என்பதே தெரியாமல் இருக்கிறார்.குடிசையில் பிறக்கும் குழந்தைகளும் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காக, பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.ஸ்டாலின் கூறுவது போல், நான் மந்திரவாதியாக இருந்திருந்தால், அவர் பேசியிருக்கவே மாட்டார். நான் மந்திரவாதி அல்ல; தமிழக மக்களுக்கு திட்டங்களை செயல்படுத்தும் செயல்வாதி நான். தப்பு செய்தவரை தட்டிக்கேட்டால் தான் தலைவன்; தட்டிக் கேட்காமல், கட்டப்பஞ்சாயத்து செய்தவர் ஸ்டாலின். அவர் தமிழகத்திற்கு தேவையா என, மக்கள் சிந்திக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.இன்னும் நிறைய அறிவிப்பு: நாமக்கல் மாவட்டம், கபிலர்மலையில், நேற்று முன்தினம் இரவு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பேசியதாவது:தி.மு.க., ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்தது. விவசாயம், தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டன. தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது. நீர் மேலாண்மை திட்டத்திற்காக, தமிழகம் தேசிய விருது பெற்றுள்ளது.உள்ளாட்சி துறையில், 143 விருதுகள் பெற்றுள்ளது. ஆனால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க., ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை என்கிறார். கொரோனா காலம், கடந்த தைப்பொங்கல், இந்தாண்டு பொங்கல் என மக்களுக்கு, 4,500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.தேர்தல் நேரத்தில் நிறைய அறிவிப்புகள் வெளிவரும். பொதுமக்களின் மனம் குளிர, மனம் மகிழ அற்புதமான அறிவிப்புகள் வெளிவரும்.இவ்வாறு, அவர் பேசினார்.திருப்பதி கோவில் அடிக்கல்திருமலை, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரான, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., குமரகுரு, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில், அஜிஸ் நகர் ரவுண்டானா அருகில், தனக்கு சொந்தமான, 4 ஏக்கர் நிலத்தை, தேவஸ்தானத்துக்கு தானமாக வழங்கியுள்ளார்.இங்கு, ஏழுமலையான் கோவில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை மற்றும் திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது. முதல்வர் இ.பி.எஸ்., காலை, 10:00 மணிக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க, கோவில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். அங்கு நடந்த யாகசாலை பூஜையிலும் பங்கேற்றார்.தொடர்ந்து, ஸ்ரீநிவாச பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்திகளுக்கு திருக்கல்யாணம் நடந்து. நிகழ்ச்சியில் அமைச்சர்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE