பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், ஒன்பது கோடி ரூபாய் மதிப்பிலான பாரம்பரிய பொருட்கள் உற்பத்தி செய்யும், தென்னை நார் கூட்டுக் குழுமத்தை, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி காணொளியில் துவக்கி வைத்தார்.மத்திய அரசு, தென்னை நார் உற்பத்தியாளர்கள் அடங்கிய கூட்டுக்குழுமங்கள் துவங்கி, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க மானியம் வழங்குகிறது. தமிழகத்தில், ஒன்பது கூட்டுக்குழுமங்கள் துவங்க அனுமதி அளிக்கப்பட்டது.இதில், பல்லடம், காங்கேயம் கூட்டுக்குழுமங்கள் செயல்படுகின்றன. பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, ஈத்தாமொழி, சேலம், தர்மபுரி கூட்டுக்குழுமங்கள் துவங்க மானியம் வழங்கப்பட்டது. ஏழு குழுமங்களின் மொத்த திட்ட செலவு, 29.22 கோடி ரூபாய்.தமிழகத்தில் இந்த கூட்டுக்குழுமங்களை, மத்திய சிறு, குறு நடுத்தர தொழில்கள் மற்றும் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, காணொளியில் துவக்கி வைத்தார்.பொள்ளாச்சியில் கூட்டுக்குழும துவக்க விழாவில் பங்கேற்ற, கயிறு வாரிய உறுப்பினர் கவுதமன் கூறியதாவது:பொள்ளாச்சியில் பாரம்பரிய கூட்டுக்குழுமம் மொத்தம், ஒன்பது கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்டுள்ளது. அதில், 5.75 கோடி ரூபாய் மானியமாக மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில், தென்னை நார் உற்பத்தியாளர் 52 பேர் உள்ளனர். இங்கு, கால் மிதியடி, காயர்ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் தயாரிக்கப்படுகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும், 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.கயிறு வாரிய மண்டல அலுவலர் பூபாலன், கூட்டுக்குழுமம் தலைவர் பழனிசாமி, துணைத் தலைவர் நாகராஜன், செயலாளர் ஆதித்யா ஜெயராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE