இருதய சிகிச்சையில் கடந்த 35 ஆண்டுகளில் மிகப்பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் மாரடைப்பு வந்து விட்டாலே மரணம் என்பதாக இருந்தது. அதில் படிப்படியாக முன்னேற்றம் வந்து இன்று பைபாஸ் சர்ஜரியே சாதாரணமானது என்ற நிலையை அடைந்துள்ளோம். இருதய சிகிச்சையில் என்னென்ன பிரச்னைகள் இருந்தது, அவை எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்பதை பார்ப்போம்.
ஆஞ்சியோ பிளாஸ்டி
86, 87 ஆண்டுகளில் இருதய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட்டால் ஆஞ்சியோ பிளாஸ்டி முறையில் சரிசெய்தனர். இதற்கு பலுான் ஆஞ்சியோ பிளாஸ்டி என்று பெயர். இந்த சிகிச்சை முறைக்கு அமெரிக்காவில் கூட சந்தேகம் இருந்தது. ஆனால் 86ல் இந்த முறை சிகிச்சை சென்னையிலேயே மேற்கொள்ளப்பட்டது. மூன்று மில்லிமீட்டர் கொண்ட பலுானை தொடை வழியாக இருதயத்திற்கு போகின்ற ரத்தக் குழாயில் செலுத்தி அடைப்பு ஏற்பட்ட இடத்தை விரிவடையச் செய்வது இந்த சிகிச்சை முறை. ஆனால் இதில் அந்த பலுானால் விரிவடைக்கப்பட்ட ரத்தக்குழாய் மீண்டும் மூடிக்கொண்டால் மீண்டும் மாரடைப்பு வருவதற்கு நிறையவே வாய்ப்பு உண்டு.அடுத்த கட்டமாக 1994ல் ஸ்டென்ட் சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டது. பலுான் சிகிச்சையுடன் நிட்டினால் போன்ற பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு சிறிய வலையை ரத்தக்குழாய்க்குள் செலுத்தி விரிவடையச்செய்வது இந்த சிகிச்சை முறை.அதற்கு முன் பைபாஸ் சர்ஜரி இருந்தது. இந்த ஸ்டென்ட் சிகிச்சை பைபாஸ் சர்ஜரியே தேவையில்லை என்ற நிலையை உருவாக்கும் என கருதப்பட்டது. ஆனால் சிலருக்கு, குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்டென்ட் பொருத்தினால் கூட 6 மாத காலத்தில் மீண்டும் அடைப்பு ஏற்பட்டது. இது ஸ்டென்ட் சிகிச்சையில் பின்னடைவை ஏற்படுத்தியது. மேலும் இந்த சிகிச்சை செய்யும் மருத்துவர்களும் மிகவும் குறைவு. இந்தியாவிலேயே 10 பேர் கூட இல்லை. இந்த ஸ்டென்டை சரியாக பொருத்தமுடியாவிடில் அந்த தருணத்திலும் உயிரிழப்பு ஏற்படும்.1994ல் ஏற்பட்ட இந்த மாற்றம் பெரிய மருத்துவமனைகளில் கூட மேற்கொள்ளப்படவில்லை.
ஸ்டென்டில் மருந்து
படிப்படியாக 2003-ல் ஸ்டென்டில் மருந்து தடவப்பட்டு தயாரிக்கப்பட்டு பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. இதனால் மீண்டும் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டது. ஆனால் ரத்த அணுக்கள் ஸ்டென்ட் உலோகத்தால் ஈர்க்கப்பட்டு மாரடைப்பு வாய்ப்பு இருக்கும் என்று பயந்தார்கள். 2011ல் மூன்று முக்கிய நிறுவனங்கள் மிகத்தரமான ஸ்டென்டுகளை உருவாக்கின; வளைந்து நெளிந்த ரத்தக்குழாய்களிலும் இந்த ஸ்டென்ட் போகும்படியாகவும் இருதய மருத்துவர்கள் எளிதில் கற்றுக்கொள்ளக்சுகூடிய வகையிலும் இருந்ததால் கேத்லேப் வசதிகொண்ட மருத்துவமனைகளில் பயன்பாட்டிற்கு வந்தன.இந்தவகை ஸ்டென்ட் சரியான முறையில் பொருத்தப்பட்டால் மீண்டும் அடைப்பு ஏற்பட 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உயிர் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருந்தது. இது பெரும் வெற்றி பெற்றது. மேலும் கை வழியாகவோ, தொடை வழியாகவே ஆஞ்சியோகிராம் செய்து கடுகு போன்ற கேமரா கொண்டு இன்ட்ரா வாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட் (இருதய ரத்தக்குழாயை மிகவும் தெளிவாக ஆராயவதற்கான) கேமரா ரத்தக்குழாயின் விட்டம், அதில் கொழுப்பு படிந்துள்ளதா, என்பதை எல்லாம் பார்த்து அதற்கு ஏற்றபடி சிகிச்சை செய்ய முடிந்தது. தற்போது பைபாஸ் சர்ஜரியை விட ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை எளிதாக இருக்கிறது.
மதுரையும் இருதய சிகிச்சையும்
மதுரையில் 21 ஆண்டுகளுக்கு முன்பு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை கிடையாது. வால்வு மாற்றும் சிகிச்சைகள் இருந்தன. 2000ல் மதுரையில் முதன் முதலில் ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை செய்யப்பட்டது. அன்று நான் செய்த முதல் நோயாளி இன்றளவும் நலமாக இருக்கிறார். இந்த பொங்கல் தினத்தன்று வாழ்த்து தெரிவித்தார். அந்த கால கட்டத்தில் சாதாரண ஸ்டென்ட்தான் இருந்தது. மதுரையில் சில குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டும்தான் இந்த சிகிச்சை வசதி இருந்தது. இன்று மதுரை மட்டுமின்றி சுற்றியுள்ள சிறிய ஊர்களில்கூட கேத்லேப் வசதியுடன் கூடிய பல மருத்துவமனைகள் வந்துவிட்டன. 100க்கும் அதிகமான இருதய மருத்துவர்களும் உள்ளனர்.2000 ஆண்டிலேயே அவசர ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மதுரையில் செய்யப்பட்டுவிட்டது. அப்போது சென்னையில் கூட அந்த சிகிச்சை கிடையாது. பல நவீன தொழில் நுட்பங்கள் மதுரையில் தினம்தினம் அறிமுகமாகி வருகின்றன.'
திராம்போ லைசஸ்' சிகிச்சை
மிக அவசரம் என்றால் 'திராம்போ லைசஸ்' என்ற அவசர சிகிச்சை மிக சிறிய ஊர்களிலும் வந்துவிட்டது. 'கோல்டன் ஹவர்' என கூறப்படும் மாரடைப்பு வந்த ஒரு மணி நேரத்திற்குள் அளிக்கப்படும் சிகிச்சை இது. மாரடைப்பு என்று தெரிந்தால் சாதாரண கிளினிக்குகளுக்கு சென்று நேரத்தை வீணாக்குவதை விட உங்களுக்கு அருகில் உள்ள கேத் லேப் வசதி கொண்ட மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.ஒரு வேளை அருகில் கேத்லேப் வசதி இல்லையென்றால் எம்.டி., மருத்துவர்களை சந்தித்து இந்த திராம்போ லைசஸ் சிகிச்சை செய்து கொண்டால் மரணத்தை தவிர்க்க முடியும்.இந்த திராம்போ லைசஸ் சிகிச்சை மாரடைப்பிற்கு மட்டுமல்ல பக்கவாதத்திற்கும் சிறந்தது.
பிரதமரின் சாதனை
முன்பு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி செய்வதற்கு 4 முதல் 5 லட்சம் வரை செலவானது. தரமான ஒரு ஸ்டென்டின் விலை ஒன்றரை லட்சம் வரை இருந்தது. இந்த நிலையில்தான் பாரத பிரதமர் நரேந்திர மோடி இதில் மவுன புரட்சியை ஏற்படுத்தினார். ஸ்டென்ட் கேப்பிங் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஸ்டென்ட்களின் விலை ரூ.30 ஆயிரத்திற்கும்மேல் இருக்க கூடாது என கட்டுப்பாட்டை கொண்டுவந்தார். இது நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும். ஆனால் பெரிய அளவில் செய்தியாகவில்லை.இதனால் பெருநிறுவனங்களின் லாபம் குறைக்கப்பட்டு குறைந்த செலவில் இருதய சிகிச்சை செய்ய முடிந்தது.இருதய நோய் வராமல் பாதுகாக்க வேண்டியது முக்கியம். வந்து விட்டால் கவலைப்பட வேண்டியதில்லை. உரிய நேரத்தில் உரிய மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்றால் அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும்.-டாக்டர் ஏ. மாதவன்இருதய சிகிச்சை நிபுணர்மதுரை.94437 26123
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE