உடுமலை:''கோவைக்கு, பிரதமர் மோடி வரும், 25ம் தேதி வருகிறார்; தமிழக அரசியலில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கும்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.திருப்பூர் மாவட்டம், உடுமலையில், பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி :கோவைக்கு, பிரதமர் மோடி வரும், 25ம் தேதி வருகிறார்; தமிழக அரசியலில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கும். வரும் தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, அதிகப்படியான பலத்துடன் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்கும்.காங்., என்பது முடிந்து போன சரித்திரம்; மிச்சம் இருந்த புதுச்சேரியும் முடிந்தது. வரும் தேர்தலில், புதுச்சேரியில் யார் தலைமையில் ஆட்சி என்பதை, தேசிய தலைமை முடிவு செய்யும்.தி.மு.க.,வில், ஸ்டாலின், 50 ஆண்டுகளாகவே முதல்வர் என கூறப்பட்டு வருகிறது. தற்போது, 3 மாதத்தில் ஆட்சி மாற்றம் என்கிறார்; இதுவும் கடந்து போகும். தி.மு.க., பொய் வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி வருகிறது. ஐந்தாவது முறையாக ஆட்சியமைக்கும் போது, இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்றனர். முதல்வரான கருணாநிதி, 'அந்தளவுக்கு தமிழகத்தில் நிலம் இல்லை' என தெரிவித்தார். நான்கு முறை முதல்வராக இருந்த அவருக்கு இந்த விஷயம் தெரியாதா.கடந்த லோக்சபா தேர்தலில், 5 சவரன் வரை கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி என கூறி, தி.மு.க.,வினர் துாண்டுதலால், பெண்கள் வைத்திருந்த நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றனர். ஆனால், தள்ளுபடி செய்யவில்லை.இவ்வாறு, பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE