திண்டுக்கல், : ''ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் வகையில், தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது,'' என, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.
திண்டுக்கல்லில், நேற்று அவர் கூறியதாவது:புதிய தமிழகம் சார்பில், தமிழக வளர்ச்சி என்ற தலைப்பில், மார்ச், 4-ல் கூட்டம் நடைபெறும். அதில், தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கப்படும். தேர்தல் பிரசாரம், செலவுகளுக்கு, கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், பெரிய கட்சிகள், விதிமுறைகளை மீறி, ஓராண்டுக்கு முன்பே பிரசாரத்தை துவங்கியுள்ளன. பண பலம் உள்ள கட்சி, தேர்தலில் வெற்றி பெறுகிறது. இதில், ஜனநாயகம் எங்குள்ளது. சின்னம் வழங்குவதிலும், தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுகிறது. சில கட்சிகள் நிரந்தரமாக சின்னம் வைத்துள்ளன.
யாருக்கும் நிரந்தர சின்னம் ஒதுக்கக்கூடாது. ஆண்டுக்கு ஒருமுறை புதிதாக கொடுக்க வேண்டும். மொத்தத்தில், தேர்தல் ஆணைய செயல்பாடுகள், ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.நிலக்கோட்டையில் கிருஷ்ணசாமி கூறியதாவது: தேர்தலுக்காக கூட்டணி சேர்க்கும், திராவிட கட்சிகள், வெற்றிக்கு பின் ஆட்சியில் பங்கேற்க செய்ய வேண்டும். மத்தியில், பா.ஜ., தனி பெரும்பான்மை பெற்றாலும், கூட்டணி கட்சிகளை ஆட்சியில் பங்கேற்க செய்துள்ளது. இதைப் பின்பற்றினால், தமிழகம் மேலும் வளமாகும். எங்கள் கோரிக்கை நிறைவேறிய பின் தான், எந்த கூட்டணி என்பதை சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE