ஈரோடு, பி : ''முதல்வருக்கு, சொல் புத்தியும் இல்லை; சுய புத்தியும் இல்லை,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.
ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையத்தில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: முதல்வருக்கு, சொல் புத்தியும் இல்லை; சுய புத்தியும் இல்லை. தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியை செயல்பட வைக்கிறது.டி.என்.பி.எஸ்.சி.,யில் ஊழல் நடந்து வருகிறது. டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், கீழக்கரையை சேர்ந்த பயிற்சி மையத்தில் படித்த, 100 பேருக்கும் எப்படி வேலை கிடைக்கும். கல்வித் துறையிலும் பல புகார்கள் உள்ளன. அமைச்சர் செங்கோட்டையன், முதல் நாள் ஒரு அறிவிப்பை வெளியிடுவார். குறைகளை சுட்டிக்காட்டினால், மறுதினம் முழுமையாக மாற்றி, வேறு அறிவிப்பு வெளியிடுவார். முதல்வரைவிட, செங்கோட்டையன் அதிகமாக, 'பல்டி' அடிப்பார்.
ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்கள், ஆசிரியர் பணிக்காக படித்தவர்களுக்கு, தேவையான அறிவிப்புகளை, இன்னும் மூன்று மாதத்தில், தி.மு.க., அரசு வெளியிடும். மத்திய அரசு தினமும், மக்களுக்கு சாட்டை அடி தருவது போல, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. அவ்வப்போது, காஸ் சிலிண்டர் விலையை உயர்த்துகிறது. ஏழு ஆண்டுகளாக பா.ஜ., ஆட்சியில் இருந்தும், இந்த விலையேற்றத்துக்கு, மன்மோகன் சிங் அரசு, காரணம் என்கின்றனர். அசாம் மாநிலத்தில் பா.ஜ., அரசு, பெட்ரோலுக்கு, 5 ரூபாய் வரியை குறைத்துள்ளது. அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள இ.பி.எஸ்., ஏன் குறைக்கவில்லை எனக் கூற வேண்டும். பெட்ரோல், டீசல் வரியை குறைப்போம் என, தேர்தல் அறிவிப்பு வெளியிடுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
கோஷம் : கூட்டம் துவங்கிய சில நிமிடங்களில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து, கோஷம் எழுப்ப வேண்டும்' என அறிவித்தார். ஸ்டாலின் கூறியபடி, 'பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை கண்டிக்கிறோம். இவற்றின் வரியை குறைத்து, விலையை குறைக்க வேண்டும்.'சிலிண்டர் விலையை உயர்த்தி, ஏழைகளை வஞ்சிக்கக் கூடாது. இவற்றின் விலை உயர்வை ரத்து செய்து, குறைந்த விலையில் கிடைக்க செய்ய வேண்டும். மத்திய அரசும், மாநில அரசும், இவற்றுக்கான வரியை குறைக்க வேண்டும்' என, கோஷம் எழுப்பினர்.ஓடையில் ஆய்வுபவானியைச் சேர்ந்த சுலோசனா என்ற பெண், தன் மனுவில், 'அம்மாபேட்டை அருகே, பூனாச்சி, சித்தார் ஓடையில், மக்காச்சோள மாவு பேக்டரியின் கழிவு கலக்கிறது. 'இதனால் அந்நீரை ஆடு, மாடுகள் கூட குடிப்பதில்லை. துர்நாற்றம் வீசுகிறது. தாங்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்' என்று கேட்டிருந்தார்.இதன்படி, மேட்டூர் செல்லும் வழியில், சித்தார்ஓடையை, ஸ்டாலின் பார்வையிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE