திருநெல்வேலி : பள்ளி மாணவிகளின் கல்விஉதவித்தொகையை வழங்கவில்லை என்ற புகாரில் மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியை மீது குற்ற நடவடிக்கை எடுக்க மாநில மனிதஉரிமை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2016--17 கல்வி ஆண்டில் 6 முதல் 8 வரை வகுப்பு மாணவிகளுக்கு வழங்கவேண்டிய கல்வி உதவித்தொகை ரூ. 4 லட்சத்து 70 ஆயிரத்தை வழங்கவில்லை, 2018 பிளஸ் டூ நர்சிங் மாணவிகள் 67 பேருக்கு அரசின் லேப்டாப் வழங்கவில்லை, ஆங்கிலவழி மாணவிகளுக்கான கட்டணத்தை திரும்ப செலுத்தாமல் தலைமையாசிரியை நாச்சியார் லட்சக்கணக்கில் முறைகேடு செய்ததாக முத்துவளவன் என்பவர் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்திற்கு புகார் அனுப்பியிருந்தார்.
ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் நேற்று விடுத்துள்ள உத்தரவு: புகார் குறித்து பள்ளிக்கல்வி அதிகாரி மூலம் நடத்திய விசாரணையில் முறைகேடுகளுக்கு ஆதாரம் இருப்பது தெரியவந்துள்ளது. தலைமையாசிரியை மீது துறைவாரியான குற்றநடவடிக்கை எடுக்கவும், புகார் தெரிவித்த முத்துவளவனுக்கு தலைமையாசிரியை ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிடப்படுகிறது, என குறிப்பிட்டுள்ளார்.இதுகுறித்து நாச்சியார் கூறியது: நான் இந்த பள்ளிக்கு 2015ல் வந்தேன். அப்போது மாணவிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 400. தற்போது மாணவிகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 353. ஒரு மாநகராட்சி பள்ளியை மாநில அளவில் தரம் உயர்த்த பாடுபட்டிருக்கிறேன்.
எங்கள் பள்ளி மாணவிகள் 7 பேர் மருத்துவபடிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தனித்த ஆதாயத்திற்காக சிலர் இத்தகைய புகாரை தெரிவித்தனர். முறைகேடு இல்லை என்பதற்காக எல்லா ஆவணங்களையும் வைத்துள்ளேன். 67 நர்சிங் மாணவிகளுக்கும் அரசின் லேப்டாப் வழங்கியுள்ளோம். அரசின் கல்விஉதவித்தொகையை அந்தந்த மாணவிகளின் வங்கி கணக்கிற்கே அனுப்பியுள்ளேன். ஆண்டு வாரியாக ஆவணங்கள் வைத்துள்ளேன். ஆணையத்தின் உத்தரவு எனக்கு கிடைக்கவில்லை. கிடைத்ததும் முறைப்படி மேல்முறையீடு செய்வேன். வரும் மே மாதம் ஓய்வுபெறுகிறேன். 6 ஆண்டுகளாக ஒரு மாநகராட்சி பள்ளியை திறம்பட நடத்தி மாநில அளவில் தரம் உயர்த்தியதற்கு எனக்கு தரப்படும் அங்கீகாரம் என நினைத்துக்கொள்கிறேன் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE