உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
ஆர்.கே.பன்னீர்செல்வம், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வுக்கு எப்போதும் ஒரு ராசி உண்டு. அது, யாரை அழிக்க நினைக்கிறதோ, அவர்கள் அதி தீவிர வளர்ச்சி அடைவர். இது தான், கடந்த கால வரலாறு. கணக்கு கேட்டதற்காக, தி.மு.க.,வில் இருந்து, எம்.ஜி.ஆரை நீக்கினார், கருணாநிதி. உடனே, அ.தி.மு.க.,வைத் துவக்கினார் எம்.ஜி.ஆர்.

தி.மு.க., ஆட்சியின் அவலங்களை சித்தரித்து, எம்.ஜி.ஆர்., நேற்று இன்று நாளை என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தைப் பார்க்க கட்டுக் கடங்காத கூட்டம். திகைத்துப்போன, தி.மு.க.,வினர், திரையரங்குகளில் கூடிநின்ற எம்.ஜி.ஆர்., ரசிகர்கள் மீது, தீ வைத்து டயர், சோடா பாட்டில்களை வீசி தாக்கினர். சிதறி ஓடிய மக்களை, ஆங்காங்கே நின்ற, தி.மு.க., குண்டர்கள், சைக்கிள் செயினால் தாக்கினர்.
தி.மு.க.,வினரின் கொலைவெறி தாக்குதலின் எதிர் விளைவாக, உப்பு சப்பு இல்லாத அந்த திரைப்படம், 100 நாட்களுக்கு மேல் ஓடி, வெற்றி விழா கண்டது. சோடா பாட்டில், சைக்கிள் செயின் ஆகியவற்றின் மாற்று உபயோகத்தை கண்டுபிடித்த மாபெரும் விஞ்ஞானிகள், தி.மு.க.,வினர் தான். அடுத்து வந்த சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று, எம்.ஜி.ஆர்., அசுர பலத்துடன் ஆட்சி அமைத்தார். அவர் இருக்கும் வரை, தி.மு.க., எதிர்க்கட்சியாகத் தான் இருக்க முடிந்தது. எம்.ஜி.ஆர்., உடல் நலமில்லாமல் அமெரிக்காவில் இருந்தபோது, 'பல்டி' அடித்தார், கருணாநிதி.

'எம்.ஜி.ஆர்., என் நீண்டநாள் நண்பர். ஆட்சியை என்னிடம் தாருங்கள். எம்.ஜி.ஆர்., வந்தவுடன் அவரிடம் கொடுத்து விடுகிறேன்' என வெட்கமில்லாமல், தேர்தலில் ஓட்டுக் கேட்டார்; ஆனால், அதை மக்கள் நம்பவில்லை. எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,விற்கு, ஜெயலலிதா தலைமை பொறுப்பு ஏற்றார். சட்டசபையில் அவரது சேலையை இழுத்து, அநாகரிகமாக செயல்பட்டனர், தி.மு.க.,வினர். அந்நிகழ்வுக்குப் பின், அ.தி.மு.க., உறுப்பினர் அல்லாதோரும், ஜெயலலிதா பக்கம் நின்று, அவரை முதல்வர் ஆக்கினர். இப்போது, ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தி, சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை ஒட்டுமொத்தமாக அள்ளலாம் என, தி.மு.க., தப்புக் கணக்கு போட்டது.
ஹிந்துக்கள் இதுவரை இல்லாத வகையில், தி.மு.க.,விற்கு எதிராக அணி திரண்டனர். இந்த முறை, தி.மு.க., சுதாரித்தது. அதனால் தான், அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், வேலுடன், 'போஸ்' கொடுத்து, 'நாங்கள் ஒன்றும் ஹிந்து விரோதி அல்ல' என்ற நாடகத்தை துவக்கினார்.தி.மு.க., அழிக்க நினைத்த ஹிந்து மதமும், இனி தீவிரமாக வளரும் என்பதில் சந்தேகமில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE