தமிழக நிகழ்வுகள்
1. வீட்டின் கதவை உடைத்து பணம், நகை திருட்டு
கிணத்துக்கடவு:பொள்ளாச்சி அருகே, வீட்டின் கதவை உடைத்து, வைரம், தங்க நகைகள் மற்றும் மூன்று லட்சம் ரூபாய் திருடப்பட்டது. போலீசார் விசாரணையில், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த, ஸ்கூட்டரையும் திருடிச்சென்றுள்ளதாகவும். இவற்றின் மொத்த மதிப்பு, 10 லட்சம் ரூபாய்' எனவும் கூறினர்.

2. மாணவன் தற்கொலை: பள்ளி முற்றுகைஅனுப்பர்பாளையம்: திருப்பூர், பி.என்., ரோடு பாண்டியன் நகரை சேர்ந்தவர் குமார்; பனியன் வேஸ்ட் துணி வியாபாரி. இவரது மகன் தேவ மணிகண்டா, 16, அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.தேவமணிகண்டா, வீட்டில் உள்ள ஒரு அறையில் படிக்க சென்றுள்ளார்; கதவை பூட்டி கொண்டார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படவில்லை. பெற்றோர், கதவை உடைத்து பார்த்தபோது, மாணவன், துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 18-ம் தேதி மாணவனின் தந்தையை அழைத்து, 'மாணவன் சரியாக படிப்பதில்லை; கண்டிக்க வேண்டும்' என்று பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.இதற்கிடையே, மாணவன் தற்கொலைக்கு, பள்ளியில் கொடுத்த அழுத்தமே காரணம்; பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, பெற்றோர், உறவினர், நண்பர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என போலீசார் சமரசம் செய்துவைத்தனர்.

3. அக்காவை கொன்றதால் ஆத்திரம் மாமனை வெட்டி சாய்த்த மச்சான்ஜோலார்பேட்டை : அக்காவை அடித்துக் கொன்ற மாமனை, அரிவாளால் வெட்டி சாய்த்த மச்சானை போலீசார் கைது செய்தனர்.
கடந்த, 2004ல் குமரனுக்கும், அல்லேரியைச் சேர்ந்த ரம்யா, 25, என்பவருக்கும் திருமணமானது. வரதட்சணை பிரச்னையில், 2005ல் ரம்யாவை, குமரன் அடித்துக் கொன்றுள்ளார். இந்த வழக்கில் கைதாகி, ஜாமினில் வந்த குமரன், ஏலகிரி வந்து, அஞ்சலியை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். ரம்யாவின் கொலைக்கு பழி வாங்க, அவரது தம்பி ராஜி திட்டமிட்டார். ரம்யாவின் கொலை வழக்கில், இன்று, திருப்பத்துார் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும் விபரத்தை அறிந்த ராஜி, நேற்று குமரன் வீட்டிற்கு சென்று, அவரை கொலை செய்துள்ளார்.
4. அமைச்சர் பேச்சு... காத்தோடு போச்சு : போராட்டம் நடத்திய 640 பேர் கைது
கோவை:கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் 640 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை கலெக்டர் அலுவலகம் முன், காலை முதல் மதியம் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் 640 பேரை, போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறுகையில், 'அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக, சட்டசபையில், 110 விதிப்படி முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள், அமல் செய்யப்படவில்லை. சமூக நலத்துறை அமைச்சர் பேச்சு நடத்தி, ஏற்றுக்கொண்டதையும் அமல் செய்யவில்லை.எனவே தான் காத்திருப்பு போராட்டம் நடத்துகிறோம்' என்றனர்.

5. நகை பறிப்பு, திருட்டு கும்பல் கைவரிசை
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், மூதாட்டிகளிடம் நகை பறிப்பு மற்றும் வீடு புகுந்து நகை திருட்டு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

6. உதவித்தொகை முறைகேடு தலைமை ஆசிரியைக்கு அபராதம்
சென்னை : ஆதிதிராவிடர் மாணவியருக்கான கல்வி உதவித் தொகையில், முறைகேடு செய்த தலைமை ஆசிரியைக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய நிகழ்வுகள் :
ம.பி., தனியார் நிறுவனம் ரூ.450 கோடி வரி மோசடி
புதுடில்லி : மத்திய பிரதேசத்தின் சோயா பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், 450 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டாமல் மோசடி செய்துள்ளதை, வருமான வரித்துறை அதிகாரிகள் உறுதி செய்து உள்ளனர்.
மத்திய பிரதேசத்தை மையமாக வைத்து செயல்படும், பிரபல சோயா பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், வருமானத்தை கணக்கில் காட்டாமல் மோசடி செய்வதாக, வருமான வரித்துறை யினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, மத்திய பிரதேசத்தின் பெதுல் மற்றும் சத்னா, மேற்கு வங்கத்தின் கோல்கட்டா, மஹாராஷ்டிராவின் மும்பை மற்றும் சோலாபுர் ஆகிய நகரங்களில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவலகங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள், சமீபத்தில் அதிரடிச் சோதனை நடத்தினர்.இதில், 'லேப்டாப், பென் டிரைவ், ஹார்டு டிரைவ்' போன்ற, 'டிஜிட்டல்' ஆவண பதிவுகள் பரிசோதனைக்கு உள்ளாயின.
அவற்றின் உதவியால், அந்நிறுவனம், 450 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டாமல், கறுப்பு பணமாக மாற்றியது கண்டறியப்பட்டது.மேலும், கணக்கில் காட்டாத 8 கோடி ரூபாய் மற்றும் 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு 'கரன்சி'யும் பறிமுதல் செய்யப்பட்டன. முறைகேடுகள் தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையை தொடர்கின்றனர்.

உலக நடப்பு
'கோலா' பாட்டிலில் சிறுநீர் மன்னிப்பு கேட்ட நிறுவனம்
லண்டன்: பிரிட்டனில் 'கோக்கோ கோலா' பாட்டிலில் சிறுநீர் நிரப்பி அனுப்பப்பட்டதற்கு வாடிக்கையாளரிடம் 'ஹெலோ பிரெஷ்' நிறுவனம் மன்னிப்பு கோரியது.
பிரிட்டன் தலைநகர் லண்டனைச் சேர்ந்த ஆலிவர் மெக்மானஸ் என்ற இளைஞர் உணவு தயாரித்து 'ஆன்லைன்' வாயிலாக வினியோகம் செய்யும் ஹெலோ பிரெஷ் நிறுவனத்திடம் மதிய உணவுக்கு நேற்று முன்தினம் 'ஆர்டர்' செய்திருந்தார். எனினும் அந்த உணவுடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்த 'கோக்கோ கோலா' பாட்டிலை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். அதில் சிறுநீர் நிரப்பி அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
ஆத்திரமடைந்த அந்த இளைஞர் இந்த விஷயத்தை 'டுவிட்டர்' வாயிலாக பதிவிட்டு ஹெலோ பிரெஷ் நிறுவனத்தையும் அவர் 'டேக்' செய்திருந்தார்.அந்த பதிவை பார்த்த மக்கள் ஹெலோ பிரெஷ் நிறுவனத்தையும் அதன் சேவையையும் கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டனர்.இதையடுத்து ஹெலோ பிரெஷ் நிறுவனம் இந்த சம்பவத்திற்காக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கோரியுள்ளது.