புதுச்சேரி; காங்., அரசு சரியாக செயல்படாததால் ஆளும் கட்சி அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர் என எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் நாராயணசாமி கொண்டு வந்த, அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்து. இதையடுத்து எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி, பா.ஜ., -அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் சட்டசபையில் இருந்து வெளியே வந்து அளித்த பேட்டி:சட்டசபையில் அரசால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை கோரும் தீர்மானம் படுதோல்வி அடைந்தது. நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது பேசிய நாராயணசாமி, தேர்தலில் தான் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா என கூறாமல், மத்திய அரசை குறை கூறினார்.அவர் கொடுத்த வாக்குறுதியில் எதையுமே செய்யவில்லை என்பது எங்கள் குற்றச்சாட்டு. இந்த அரசு சரியாக செயல்படாததால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்தனர். ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை குறைந்ததால், எதிர்கட்சி என்ற முறையில், நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வர வேண்டியது எங்கள் கடமை.ஆட்சி காலத்தில், பாலங்கள் திறந்துள்ளதாக நாராயணசாமி கூறினார். அனைத்து பாலங்களும், எங்கள் ஆட்சியில் கட்டத் துவங்கி, தற்போது முடித்து திறந்துள்ளார்கள்.ரொட்டி பால் திட்டத்தை, சிற்றுண்டி திட்டம் என பெயர் மாற்றி, அதையும் செயல்படுத்தவில்லை. மதிய உணவும் வழங்கவில்லை. தொகுதி மேம்பாட்டு நிதி தராததால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தொகுதி பக்கம் போக முடியவில்லை.நீங்கள் என்ன செய்தீர்கள் என கேட்டதற்கு பதில் கூறாமல், மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதா என பேசுகிறார். மத்திய அரசு செய்யாததை பார்லிமெண்ட்டில் தான் கேட்க வேண்டும்.அதிகாரம் கவர்னருக்கா, முதல்வருக்கா என போட்டி சண்டையில் காலத்தை ஓட்டி விட்டார். அதனால் திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியவில்லை. ஆளும் கட்சியினர் எதை கூறினர், எதை செய்தனர் என்பது மக்களுக்கு தெரியும். இது சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE