பெங்களூரு - தமிழக அரசின் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு, கர்நாடகா முட்டுக்கட்டை போடுகிறது.
தமிழகத்தின், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே குன்னத்துார் பகுதியில், காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்துக்கு, தமிழக முதல்வர், இ.பி.எஸ்., நேற்று முன்தினம் அடிக்கால் நாட்டினார். இதற்கு, கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பெங்களூரில், நேற்று கூறியதாவது: காவிரி ஆறு விஷயத்தில், எந்த காரணத்தை முன்னிட்டும், தமிழக திட்டத்துக்கு வாய்ப்பு தர மாட்டோம். எந்த காரணத்துக்கும், காவிரியிலிருந்து தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விட மாட்டோம்.சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசிடமும் முறையிடப்படும். ஒரு வேளை தமிழக அரசின் நதிகள் இணைப்பு திட்டத்துக்கு அனுமதி வழங்கினால், மேகதாது, மார்கண்டேயா திட்டங்களுக்கு அனுமதி கேட்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, கூறியதாவது:தமிழக அரசு, காவிரி ஆற்றின், 45 டி.எம்.சி., தண்ணீரை முறைகேடாக பயன்படுத்தி, நதிகள் இணைப்பு திட்டத்துக்கு முற்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.இம்முறைகேட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று முதல்வரை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறும் போது, ''தமிழக அரசின் நதிகள் இணைப்பு திட்டத்துக்கு, மத்திய அரசு தான் நிதியுதவி செய்கிறது. ''இது, கர்நாடக அரசுக்கு தெரியவில்லையா. நான் முதல்வராக இருந்த போது, மேகதாது திட்டத்துக்கு, அ.தி.மு.க., அரசு அடிக்கடி இடையூறு செய்தது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE