அ.தி.மு.க.,வுடன் கூடி பழகி, சிதைத்து, சிதறடித்து, அக்கட்சியை பலவீனப்படுத்த, பா.ஜ., முயற்சித்து வருகிறது.
-திருமாவளவன்
'அ.தி.மு.க., மேலே பாசம் இருந்தா, அதைக் காப்பாற்ற, அந்த கூட்டணியில் சேர்ந்து, பா.ஜ.,வை வெளியேற்ற முயற்சி செய்து பாருங்களேன்...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேச்சு
கவர்னர் நியமனம், கவர்னர் நீக்கம் போன்றவை, ஜனாதிபதியின் தனிப்பட்ட உரிமை, அதிகாரம். அதில், பா.ஜ., தலையிடுவதில்லை. நடந்த மாற்றங்களில் எங்கள் கட்சிக்கு தொடர்பில்லை.
-வானதி சீனிவாசன்
'எந்த கட்சி தான், எங்களுக்கு தொடர்பு இருக்கிறது என சொல்லும்... எல்லாம் திரைமறைவு வேலைகள் மூலம் நடத்தப்படுவது தானே...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., தேசிய மகளிரணி செயலர் வானதி சீனிவாசன் பேட்டி
கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு, அந்த நிலங்களை வழங்க வேண்டும். இதுவரை அவர்கள் வசம் அந்த நிலங்கள் இருப்பதால் தான் பத்திரமாக உள்ளன. கோவில் நில நிர்வாகத்தை தங்களிடம் வழங்க, பா.ஜ., கோருகிறது. அவர்களிடம் கொடுத்தால், கோவில் சொத்துகள் கதி என்னவாகும்?
-மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்

'நல்லா இருக்கிறதே உங்கள் பேச்சு... வாடகைக்கு இருப்பவர்கள் வீட்டை சொந்தம் கொண்டாடினால், வாடகைக்கு யாரும் வீட்டை விட மாட்டார்கள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேச்சு
தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு இரண்டு இலக்கங்களில் இடங்களை ஒதுக்குமாறு, அ.தி.மு.க.,விடம் கேட்டு வருகிறோம். அதற்கான பேச்சு நடந்து வருகிறது.
-தமிழக பா.ஜ., பொறுப்பாளர் ரவி
'இரண்டு இலக்கம் என்றால், 11 இடங்களை வைத்துக் கொள்ளுங்கள் என, அ.தி.மு.க., கொடுத்து விடப் போகிறது...' என, கிண்டலடிக்கத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் ரவி பேட்டி
தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு, காங்கிரஸ் பல முறை, அதிகாரத்தில் பங்களித்துள்ளது; அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது. ஆனால், பா.ஜ.,விலிருந்து ஒரு லோக்சபா எம்.பி., 'சீட்' கூட, அந்த சமுதாயத்தினருக்கு வழங்கியதில்லை.
-காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர்
'தவறான தகவல். தேவேந்திரகுல வேளாளர் பலர், பா.ஜ., - எம்.பி.,க்களாக இப்போதும் உள்ளனர்...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் பேச்சு
கிராமங்களில் வாழும் விவசாயிகள், உழைப்பாளர்கள் என்றைக்கு முன்னேறுகின்றனரோ அன்று தான், நாடு முன்னேறியதாக அர்த்தம். தமிழர்களுக்கு பிற மொழிகள் அனைத்தையும் கற்கும் அறிவும், ஆற்றலும் அதிகம். அதே நேரம் 'திணிக்கும் தின்பண்டம் என்றும் இனிக்காது' என்பதையும் உணர வேண்டும்.
-முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம்
'தமிழக தலைவர்கள் பலர், தமிழகம் தாண்டி வேறு எங்குமே சென்றிருக்க மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு பிற மொழிகள் கற்க வேண்டிய தேவையும் இல்லாமல் போயிற்று...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பேச்சு
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE