சென்னை : அரசு ஒப்பந்ததாரர் களுக்கு, ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளதால், தி.மு.க., --- எம்.எல்.ஏ.,க்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
தமிழகத்திலுள்ள பல்வேறு துறைகளுக்கான கட்டுமான பணிகளை, பொதுப்பணி துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். நெடுஞ்சாலை, உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகள் வாயிலாக, நேரடியாக பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில், சட்டசபை தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இதனிடையே, முதல்வர் இ.பி.எஸ்., கட்டுப்பாட்டில் உள்ள பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறைகளில், பல கோடி ரூபாய் பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. பல பணிகளுக்கு ஒப்பந்ததாரர் தேர்வு நடத்தப்பட்டு, பணிகள் முடியும் நிலையில் உள்ளன.இதேபோல, பல்வேறு துறைகளிலும், 3,000க்கும் மேற்பட்ட பணிகளுக்கு ஒப்பந்தங்கள் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதில், தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் மேம்பாட்டு நிதிக்கான பணிகளும் அடக்கம்.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பலரும், தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை. பல லட்சம் ரூபாய்க்கு மேல் மிச்சம் வைத்துள்ளனர்.
தேர்தல் அறிவிப்புக்கு முன், இந்த நிதியை செலவிட்டால் மட்டுமே, மக்கள் மத்தியில், கடைசி நேரத்தில் நல்ல பெயரை பெற முடியும். நிதியை செலவிடாவிட்டால், தொகுதி மேம்பாட்டு நிதி, மீண்டும், அரசு கஜானாவிற்கே சென்று சேரும்.எனவே, பொதுப்பணித் துறை வாயிலாகவும், உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்பந்ததாரர்கள் வாயிலாகவும், தார் சாலை, சிமென்ட் சாலை, மழைநீர் கால்வாய், பஸ் நிறுத்தம், சமுதாய கூடம் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு, எம்.எல்.ஏ.,க்கள் அனுமதி வழங்கியுள்ளனர். பல இடங்களில் பணிகளை துவங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், தற்போது வழங்கிய ஒப்பந்த பணிகள் குறித்து விசாரிக்கப்படும் என, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதனால், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் பணிகளை செய்ய, ஒப்பந்ததாரர்கள் தயக்கம் காட்ட துவங்கியுள்ளனர். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE