பெங்களூரு: ஒவ்வொரு முறையும், கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னையை எதிர்கொள்ளும் பெங்களூருக்கு, இந்த முறை குடிநீர் பிரச்னை ஏற்படாது. நகருக்கு குடிநீர் வினியோகிக்கும் அணைகளில், போதிய தண்ணீர் இருப்பு உள்ளதால் அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவின், கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, பெங்களூருக்கு, தினமும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் வினியோகிக்கிறது. ஒரு மாதத்துக்கு, 1.6 டி.எம்.சி., தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. ஆண்டுதோறும், கோடை காலத்தில், இந்த அளவில் தண்ணீர் வினியோகிப்பது, குடிநீர் வாரியத்துக்கு பெரும் சவாலாக இருக்கும்.
குடிநீர்
பெங்களூரு மட்டுமின்றி, மைசூரு, மாண்டியா, ராம்நகர் மாவட்டங்களும் கூட, குடிநீருக்காக காவிரியை நம்பியுள்ளன. மற்ற நாட்களுடன் ஒப்பிட்டால், கோடை காலத்தில் தண்ணீர் தேவை அதிகமிருக்கும். தேவைக்கு தகுந்தபடி, குடிநீர் வழங்க முடியாமல் அதிகாரிகள் திணறுவர். கே.ஆர்.எஸ்., அணையில், தண்ணீர் குறைந்தால், கபினி அணையிலிருந்து, குடிநீர் வழங்கப்படும். ஆனால், நடப்பாண்டு கோடை காலத்தில், இது போன்ற பிரச்னை ஏற்படாது. ஏனென்றால் மாநிலத்தின், முக்கியமான அணைகளில், போதிய தண்ணீர் இருப்பு உள்ளது.
பெங்களூரு குடிநீர் வாரிய தலைமை பொறியாளர் சோமசேகர் கூறியதாவது:கோடை காலத்தில், குடிநீர் வழங்குவதில் எந்த தொந்தரவும் ஏற்படாமல், முன்னேற்பாடு செய்கிறோம். அந்த நேரத்தில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள, பெங்களூரு முழுதும், சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் தங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், குடிநீர் பைப்லைன் பாதைகளில், நீர்க்கசிவு இருந்தால், பைப்லைன் உடைந்து தண்ணீர் வீணானால், பழுது பார்க்க நடவடிக்கை எடுப்பர். பம்ப் ஹவுஸ்களில், ஊழியர்களின் பணிகள், தண்ணீர் குழாய்களில், கழிவு நீர் சேராமல் கண்காணிப்பர். தரமான குடிநீர் வழங்குவதில், கவனமாக இருப்பர்.நடவடிக்கைமக்களின் புகார்களை, உடனடியாக மேற்பார்வையாளரின் கவனத்துக்கு கொண்டு வந்து, தீர்வு காண்பதன் மூலம், கோடைக்காலம் முழுதும், நகரின் எந்த இடத்திலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல், அந்த அதிகாரிகள் பார்த்துக் கொள்வர்.
எங்காவது குடிநீர் பிரச்னை இருப்பது தெரிந்தால், அப்பகுதிகளுக்கு டேங்கர்களில் குடிநீர் அனுப்ப, நடவடிக்கை எடுப்பர்.இம்முறை கோடையில், பெங்களூருக்கு குடிநீர் வினியோகிப்பதில் பிரச்னை ஏற்படாது. கே.ஆர்.எஸ்., அணையில், 36 டி.எம்.சி., கபினியில், 16 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு உள்ளது.
வினியோகம்
மார்ச், ஏப்ரல், மே, ஜூன் இறுதி வரையிலான, நான்கு மாதங்களுக்கு, 6.5 - 7 டி.எம்.சி., தண்ணீர் போதுமானதாக இருக்கும். இவ்வளவு தண்ணீர், கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் உள்ளது.பெங்களூரு மாநகராட்சியில் சேர்க்கப்பட்ட, 110 கிராமங்களில், 53 கிராமங்களின், 10 முதல், 15 ஆயிரம் கட்டடங்கள், குடிநீர் இணைப்பு பெற்றுள்ளன. இவற்றிற்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. வரும், 2023 -- 2024ல், காவிரி குடிநீர், 5வது கட்ட திட்டம் முடிவடைந்த பின், மற்ற கிராமங்களுக்கும், காவிரி குடிநீர் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE