சிக்கபல்லபூர்: கர்நாடகாவில் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
கர்நாடகா மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டம் ஹிரெனகவல்லி பகுதியில் உள்ள கல் குவாரியில், நேற்று (பிப்.,22) இரவு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் சிலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரித்த போலீசார், கல்குவாரியில் சட்டவிரோதமாக வாங்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் தான் வெடித்தது என்றும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். இது குறித்து முதல்வர் எடியூரப்பா, வெடிவிபத்து தொடர்பாக விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

வெடிவிபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‛கல்குவாரி வெடி விபத்தில் 6 பேர் பலியான செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்,' இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE