சேலம்: தமிழகத்தில், பதிவு செய்யாமல் செயல்படும் ரோட்டரி, லயன்ஸ் உள்ளிட்ட சங்கங்களின் மீது நடவடிக்கை எடுக்க, பதிவுத்துறை அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சேலத்தில் மூன்று சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, தண்டத்தொகை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சேலம் சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் ஜெயசீலன், தமிழக பதிவுத்துறை தலைவருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த பல ஆண்டுகளாக, சமூக சேவை என்ற பெயரில், ரோட்டரி, லயன்ஸ், பி.என்.ஐ., டோஸ்ட் மாஸ்டர், மசானிக் லாட்ஜ் போன்ற பல வெளிநாட்டு சங்கங்கள், தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இந்திய மற்றும் தமிழ்நாடு பதிவு சங்கங்கள் சட்டப்படி, இவை கட்டாயமாக பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், இவை பதிவு செய்யப்படாமல், வருமான வரி ஏய்ப்பு, ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு, வங்கிக்கணக்குகள் மூலம் கறுப்பு பணத்தை பரிமாற்றம் செய்தல் உள்ளிட்ட சட்டவிரோத குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புகார் மீது நடவடிக்கை எடுக்க, அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும், பதிவுத்துறை தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, சேலம் மேற்கு மாவட்ட பதிவாளர் சுடரொளி, முதல்கட்டமாக, ரோட்டரி கிளப் ஆப் சேலம் சென்ட்ரல், ரோட்டரி கிளப் ஆப் சேலம் மெட்ரோபொலிஸ், லயன்ஸ் கிளப் ஆப் சேலம் ஈஸ்ட் ஆகிய சங்கங்களுக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்காக விளக்கம் கோரினார். அதற்கு, பன்னாட்டு நிறுவன சட்டதிட்டங்களின் அடிப்படையில், இயங்கி வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டன.
அதை ஏற்றுக்கொள்ளாத பதிவாளர், பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: எந்த சட்டத்துக்கு கீழ் உள்ள அமைப்புகளாக இருப்பினும், அந்தந்த மாநில சட்டத்துக்கு உட்பட்டு, அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். எனவே, தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்ட விதிகளின் படி, 45 ஆண்டுகளுக்கு, இச்சட்டத்தை கடைப்பிடிக்காத குற்றத்துக்கு தண்டத்தொகை மற்றும் 45 ஆண்டுக்கான கோர்வைகளை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஜெயசீலன் கூறியதாவது: பன்னாட்டு சங்கங்கள் போர்வையில், தமிழகத்தில் பதிவு செய்யப்படாமல், பல ஆண்டுகளாக வருமானவரி ஏய்ப்பு, கறுப்பு பணம் பரிமாற்றம் உள்ளிட்டவைகளுக்காக, தமிழகம் முழுவதும் ஏராளமான சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில், 26 சங்கங்கள் பதிவு செய்யாமல் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. அனைத்தும் பதிவு செய்யாமல் இயங்கும் குற்றத்துக்காக மட்டுமே, ஒவ்வொரு சங்கமும், ஒரு உறுப்பினருக்கு, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம், 5 ரூபாய் வீதம் தண்டத்தொகை செலுத்த வேண்டியிருக்கும். 40 ஆண்டுகளுக்கு கணக்கிடும் போது, பதிவுத்துறைக்கு கோடிக்கணக்கில் தண்டத்தொகை செலுத்த வேண்டியிருக்கும். இதே போல், தமிழகத்தில் உள்ள அனைத்து ரோட்டரி, லயன்ஸ் உள்ளிட்ட சங்கங்களிலும் ஆய்வு நடத்தி, தண்டத்தொகை வசூலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE