புதுடில்லி: பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வலியுறுத்துவதாகவும், பல மாநில அரசுகள் எதிர்ப்பதாகவும் மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: கொரோனா பாதிப்பை தொடர்ந்து பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் நாடுகள், உற்பத்தியை குறைத்து வருகின்றன. இதனால் சர்வதேச சந்தையில் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது பெட்ரோலிய பொருட்களின் விலை சற்று குறையத் தொடங்கியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் பல மாநில அரசுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

விரைவில் இதற்கான நடவடிக்கையை ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவிலேயே காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் தான் பெட்ரோலிய பொருட்களுக்கு மாநில அரசுகள் அதிகமான வரியை விதிக்கின்றன. இதனை குறைக்கும்படி தாங்கள் ஆளும் மாநில முதல்வர்களை அவர் முதலில் கோர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE