கரூர், 'லைட்ஹவுஸ் கார்னர் ரவுண்டானா'வில், பழைய காந்தி சிலைக்கு பதிலாக, புதிய சிலை அமைக்கப்பட்டு, முதல்வர் இ.பி.எஸ்., திறந்து வைத்தார்.
'கட்டுமானம் சரி இல்லை; பழைய சிலையை மீண்டும் வைக்க வேண்டும்' என, காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி, அவரது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். தடையை மீறியதாக, ஜோதிமணி கைது செய்யப்பாட்டார்.
டில்லிக்கு சென்றதில் இருந்தே, ஜோதிமணி தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி, அவர்களுடன் சேர்ந்து மட்டுமே செயல்படுகிறார் என, உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ஆதங்கம் உண்டு. எனவே, ஜோதியின் ஆர்ப்பாட்டத்துக்கு அவர்கள் யாரும் போகவில்லை. ஆனால், வழக்கமான அவரது ஆதரவாளர்களுடன், தி.மு.க.,வினரும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் காந்தி சிலைக்காக நடந்தது என கட்டமைத்தாலும், உண்மையில், உள்ளூர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக, தி.மு.க., பிரமுகரால் கொம்புசீவி விடப்பட்டு, ஜோதிமணி நடத்திய ஆர்ப்பாட்டம் என்கின்றனர்.
முதலில் இருந்தது, மார்பளவு காந்தி சிலை. அதை மாற்றி, முழு உருவ சிலை வைத்தது ஒரு குழு. அதற்கு காரணம், அந்த பகுதியில் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு முழு உருவ சிலை வைக்க விஜயபாஸ்கர் விரும்பினார்.
காந்தி சிறிதாக இருக்கும்போது, இவர்கள் மூவரும் பெரிதாக தெரிவது விமர்சனத்துக்கு உள்ளாகும் என்பதால், காந்திக்கு புது பொலிவு கிடைத்தது.
மூவர் சிலைகள் அங்கே வந்ததற்கும் பின்னணி உண்டு. அந்த இடத்தில், கருணாநிதி சிலை வைக்க, தி.மு.க.,வினர் திட்டம் போட்டு இருந்தனர். இது தெரிந்ததும், இடத்தையே விலைக்கு வாங்கி, அவசரமாக சிலைகள் அமைத்து, முதல்வர் மூலம் திறக்க வைத்தார், விஜயபாஸ்கர்.
இதனால், தி.மு.க.,வுக்கு கடுப்பு. ஆனால், வெளிப்படையாக எதிர்க்க முடியாது. காரணம், அண்ணாதுரை சிலையும் திறக்கப்பட்டுள்ளது.
எனவேதான், ஜோதிமணிக்கு கொம்பு சீவிவிட்டு முன்னிலைப்படுத்தியது. அவரும், தி.மு.க., சொன்னதை எல்லாம் அப்படியே செய்தார். கைதாகி மண்டபத்தில் அமர்ந்திருந்த நிலையிலும், பின்னால் இருந்து ஒருவர், 'லைவ் கமென்ட்டரி' கொடுக்க, அதன்படியே ஜோதிமணி அபிநயம் செய்தது தான், காமெடியின் ஹைலைட்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE