ஓசூர்:காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக மாநில எல்லையில், கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே, குன்னத்துாரில், 6,941 கோடி ரூபாய் செலவில், காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு, முதல் கட்ட திட்டத்துக்கு, முதல்வர் பழனிசாமி., கடந்த, 21ல் அடிக்கல் நாட்டினார். இதற்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடைகள் மூடல்
இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் சாராகோவிந்த், கன்னட சலுவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில், அம்மாநில எல்லையான அத்திப்பள்ளியில், கண்டன போராட்டம் நடந்தது. ஊர்வலமாக வந்த அவர்கள், அத்திப்பள்ளி ஆர்ச் அருகே, போராட்டத்தில் ஈடுபட்டனர்.தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து பாதித்ததால், கர்நாடக போலீசார், வாட்டாள் நாகராஜை குண்டு கட்டாக துாக்கி, பஸ்சில் ஏற்றினர். தொடர்ந்து, ஏழு பெண்கள் உட்பட, 90 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னட அமைப்புகளின் போராட்டத்தால், அம்மாநில எல்லையில் இருந்த, மதுபான கடைகள், பட்டாசு கடைகள் உட்பட அனைத்தும் மூடப்பட்டிருந்தன.பிரதமர் மீது பாய்ச்சல்கன்னட சலுவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறியதாவது:தமிழக முதல்வர் பழனி்சாமி., மொத்த மாநிலத்தையும், பா.ஜ.,வுக்கு விற்று வருகிறார். காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு, பிரதமர் மோடி, 7,000 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளார். இன்னும், 20 ஆயிரம் கோடி ரூபாய் கூட கொடுப்பார்.
நதிநீர் இணைப்புக்கு அடிக்கல் நாட்டிய பின் தான், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, அமைச்சர்களுக்கு இது தெரியும். பெங்களூரு, கோலார், சிக்கப்பல்லாபூர், துமகூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், குடிநீர் இல்லை. ஆனால், தமிழகத்தில், 118 கி.மீ.,க்கு கால்வாய் அமைக்க அனுமதி அளித்தும், பணம் தருவதாகவும், பிரதமர் மோடி கூறியுள்ளார்.
எடியூரப்பா, தமிழகத்தின் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். வரும், 27க்குள் இத்திட்டத்தை தடுத்து நிறுத்தா விட்டால், கர்நாடகாவில் முழு அடைப்பு நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE