சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்: மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் இருந்து வருபவர்கள், தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதுடன், அவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில், கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், அண்டை மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, எல்லை மாவட்டங்களில், கண்காணிப்பு தீவிரப்படுத்தி வருகிறோம்.
'டவுட்' தனபாலு: சர்வதேச நிலவரம், நம் நாட்டில் கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் கொரோனா நிலவரத்தை பார்க்கும் போது, நம் மாநிலத்தில் கொஞ்சம் அசட்டையாக இருக்கிறோமோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. ஏனெனில், கொரோனா கொடூரன் இன்னும் அழியவில்லை. ஆனால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு வந்து விட்டனர். இது, பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற பீதி எழுகிறது!
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: அசாம் மாநிலத்தில் பா.ஜ., அரசு, பெட்ரோலுக்கு, 5 ரூபாய் வரியை குறைத்துள்ளது. அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள பழனிசாமி ஏன் குறைக்கவில்லை என கூற வேண்டும். பெட்ரோல், டீசல் வரியை குறைப்போம் என தேர்தல் அறிவிப்பு வெளியிடுங்கள்.
'டவுட்' தனபாலு: தேர்தல் பிரசார கூட்டங்களில், முதல்வர், இ.பி.எஸ்., தினமும் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு, அவற்றை நிறைவேற்றியும் வருகிறார். அதை அறியும் நீங்கள், 'இது ஏற்கனவே நான் சொன்னது தான்' என்கிறீர்கள். அடுத்து அவர், பெட்ரோல், டீசல் வரியை குறைக்கலாம் என எண்ணியிருப்பார். அவர் குறைத்து விடக் கூடாது என்பதற்காக, 'குறையுங்களேன்' என, சவால் விடுகிறீர்களோ என்ற, 'டவுட்' வாகன ஓட்டிகளுக்கு வருகிறது!
பத்திரிகை செய்தி: மத்திய பிரதேசத்தில், கமல்நாத் தலைமையிலான அரசு கவிழ்ந்து, இன்னும் ஒரு ஆண்டு ஆகாத நிலையில், புதுச்சேரியிலும், காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததால், கட்சி மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இப்போது, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும் தான், காங்., ஆட்சி நடக்கிறது.
'டவுட்' தனபாலு: கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, காங்., தேய்ந்து வருகிறது; விரைவில் மறைந்து விடுமோ என்ற, 'டவுட்'டை ஏற்படுத்துகிறது. ஒரு காலத்தில், தேசம் எங்கும் பரவியிருந்த அக்கட்சி, இப்போது, மக்கிப் போய் விட்டது. இதற்கு காரணம், இப்போதைய தலைமையா அல்லது அக்கட்சியின் உளுத்துப்போன கொள்கைகளா என்ற, 'டவுட்டும்' சேர்ந்து கொள்ளுது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE