'பச்சோந்தி' அரசியல்வாதியை ஆதரிக்காதீர்!
பா.விஜய், மெக்லீன், அமெரிக்காவிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அயோக்கியரின் கடைசிப் புகலிடம், அரசியல்-; பணம், பாதாளம் வரை பாயும்' என்ற பழமொழிகள் இப்போது நிரூபணமாகி வருகின்றன.தேர்தல் நெருங்க நெருங்க, கட்சி மாறும் இந்த அரசியல்வாதிகளின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது.ஆற்காடு பா.ம.க., பிரமுகர் ஒருவரின் கடனை அடைத்து, தி.மு.க., அவரை இழுத்துள்ளதாம். இதெல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்றது தான். ஆள் பிடிக்கும் வேலை, இன்னும் கனஜோராக நடந்து வருகிறது.புதுச்சேரியில் நடக்கும் கதை, எல்லாருக்கும் தெரியும்.கொள்கை, கட்சி, விசுவாசம் என எதுவுமே, இன்றைய அரசியல்வாதிகளிடம் இல்லை. 'பணம் தருகிறாயா... எங்கு வேண்டுமானாலும் வருவேன்' என்பது தான், அவர்களின் கொள்கை.
பச்சோந்தி போன்ற இந்த அரசியல்வாதிகள், மிக மோசமான நடத்தை உடையோர். எம்.பி., - எம்.எல்.ஏ., ஆன பின், ஒருவர் கட்சி மாறினால், பதவி பறிப்பு மட்டும் மேற்கொள்ளாமல், அவருக்கு ஓய்வூதியம் வழங்குவதையும் நிறுத்த வேண்டும். மக்கள் வரிப்பணத்தில், பச்சோந்தி அரசியல்வாதிகளுக்கு ஓய்வூதியம் ஏன் வழங்க வேண்டும்?தமிழக வாக்காளரே... தன் சுயநலத்திற்காக, கட்சி மாறி, தேர்தலில் போட்டியிடும் நபருக்கு ஓட்டு அளித்து, அவரின் பச்சோந்தித்தனத்தை ஆதரிக்காதீர்!
நாவடக்கம் தேவை!
ஆர்.மகேசன், அருப்புக்கோட்டையிலிருந்து எழுதுகிறார்: சமீபகாலமாக பொது இடங்களிலும், சமூக வலைதளங்களிலும் மாற்றுக்கட்சியினரை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் வசைபாடும் கலாசாரம் பெருகி வருகிறது.தி.மு.க.,வைச் சேர்ந்த ஆ.ராசா, உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க., அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பொது இடங்களில் பேசுவதை, காது கொடுத்து கேட்க முடியவில்லை. சபை நாகரிகம் கூட தெரியாத இவர்களா, இந்நாட்டை வழிநடத்தப் போகின்றனர்... வெட்கக்கேடான விஷயம்!கண்ணியமற்ற பேச்சில் கைதேர்ந்தோர், தி.மு.க., வினர் என்பது, நாடறிந்த விஷயம். இதை, கருணாநிதியே பல சந்தர்ப்பங்களில் நிரூபித்திருக்கிறார்.பொதுமேடையில் ஆபாசமாக பச்சை பச்சையாக பேசுவதில், தி.மு.க.,வில் இருந்த, தீப்பொறி ஆறுமுகம் என்பவருக்கு நிகர், வேறு எவருமே கிடையாது. இவர், இரு திராவிடக் கட்சிகளிலும் சேர்ந்து மாறி மாறி திட்டினார்.இவரது பொதுக்கூட்டத்திற்கு வர, பெண்களை அனுமதிப்பதில்லை என்றால், அது எத்தகைய தரம் கெட்ட பேச்சாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.ஆறுமுகம் என்ற இந்த ஆபாச பேச்சாளருக்கு, தி.மு.க.,வை தோற்றுவித்த அண்ணாதுரையால் வழங்கப்பட்ட அங்கீகாரம் தான், 'தீப்பொறி' என்ற அடைமொழி.தேனி மாவட்டத்தில், தி.மு.க., சார்பில் நடந்த, மக்கள் சபை கூட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர், துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்தார். இதெல்லாம் அநாகரிகத்தின் உச்சம்.தி.மு.க., எதிர்க்கட்சியாக இருக்கும்போதே, துணை முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுகின்றனர் என்றால், அக்கட்சி ஆட்சிக்கு வந்தால், பொது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.
கருப்பட்டியை காப்பாற்றுங்கள்!
பி.சூர்யா, பொள்ளாச்சியிலிருந்து எழுதுகிறார்: 'அஸ்கா' என்றழைக்கப்படும் வெள்ளை சர்க்கரை, உடல் நலனுக்கு தீங்கானது. அதற்கு மாற்றாக, கருப்பட்டியை உபயோகித்தால் உடலுக்கு நல்லது என்ற மருத்துவ ஆலோசனையை, மக்கள் ஏற்றுக் கொள்ள துவங்கிஉள்ளனர்.
இதனால், தமிழகத்தில் தற்போது கருப்பட்டிக்கு மவுசு அதிகரித்து விட்டது. தென்னங்கருப்பட்டி மற்றும் பனங்கருப்பட்டியை மக்கள் தேடிச் சென்று வாங்கத் துவங்கி விட்டனர்; இது வரவேற்கத்தக்க, நல்ல மாற்றம் தான்.கருப்பட்டி மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை உணர்ந்த சில வணிகர்கள், வழக்கம் போல, கருப்பட்டியிலும் கலப்படம் செய்ய துவங்கி விட்டனர்.வெள்ளை சர்க்கரை, மைதா மாவு மற்றும் சில ரசாயன பொருட்களை பயன்படுத்தி, செயற்கை கருப்பட்டி உருவாக்குகின்றனர். இது உடல் நலனுக்கு தீங்கானது.உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து, இந்த கலப்பட வியாபாரிகளை கண்டறிந்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இயற்கை உணவை நாட துவங்கியுள்ள மக்களின் ஆர்வத்தை புரிந்து, தரமான கருப்பட்டிகளை காதி கிராப்ட், கூட்டுறவு பண்டக சாலைகள் மூலமாக விற்பனை செய்ய, அரசு முன்வர வேண்டும்.
கொஞ்சம் விலகியே இருங்கள்!
சிவ.தொல்காப்பியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கும் முதல் சட்டசபைத் தேர்தல் என்பதால், சந்தேகமே இல்லாமல் இது, அ.தி.மு.க.,விற்கு வாழ்வா, சாவா போராட்டமே!லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்தும், அ.தி.மு.க., வெற்றி பெறவில்லை. அதனால், இயன்ற வரையில் கோஷ்டி பூசலை மறைத்து, இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.தி.மு.க., மீதான பயம், மக்கள் மனதில் இன்றும் நிலைத்திருப்பதும், முதல்வர் இ.பி.எஸ்., ஆட்சி மீது நல்ல எண்ணம் இருப்பதும், அ.தி.மு.க.,விற்கு சாதகமே.இந்நிலையில், பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர், அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
ஜெயலலிதாவால், முதல்வராக நியமனம் செய்யபட்டவர் தான், பன்னீர்செல்வம். தன்னிச்சையாக செயல்பட முடியாததால், அவரின் திறமையை அறிய முடியவில்லை. மேலும், ஜெ., மரணம் தொடர்பாக, ஆறுமுகம் விசாரணை கமிஷனில், அவர் ஆஜராகாமல் தவிர்ப்பது, அவர் மீதான நம்பிக்கைக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அவர் கட்சியில்தன்னை முன்னிறுத்தி, கோஷ்டி பூசலை உருவாக்காமல், இ.பி.எஸ்., உடன் இணைந்து செயல்பட வேண்டும்.
அ.தி.மு.க.,விலிருந்து, சசிகலா விலகி இருப்பதே நல்லது. ஏனெனில், ஜெ., மரணம் சம்பந்தமான சந்தேகங்கள், பொதுமக்களுக்கு இன்னும் நீங்கவில்லை. ஜெ.,யின் இடத்தில், சசிகலா அமர்வதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அ.தி.மு.க., வரும் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால், மேற்கண்ட இருவரும் வழிவிட வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE