'அதுமட்டுமின்றி, தமிழ் என்றால் அவர்கள் பேசுவது தான்; எழுத்து என்றால் அவர்கள் எழுதுவது தான்; சொற்பொழிவு என்றால் அவர்கள் உரைப்பது தான் என்றாகி விட்டது. வரலாற்றையே திருத்தி எழுதி, தமிழர்களின் பாரம்பரியத்தையே மறைத்து விட்டது, இந்த கூட்டம்...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி:திராவிடக் கலாசாரம் என்பது ஜல்லிக்கட்டு, முருகன் வழிபாடு, பரத நாட்டியம், கம்பராமாயணம், திருக்குறள் போன்றவை தானே! இவையே இல்லை என, திராவிடக் கட்சிகள் கூறுகின்றன. ஊழல், வாரிசு அரசியல், பிரித்தாளும் சூழ்ச்சி போன்றவையே திராவிடக் கொள்கைகளாக மாறிவிட்டன.
'முதலில், உங்கள் கட்சியில், பெண்களுக்கு எதிரான, பெண்களை தாக்கிய, பெண்களிடம் அத்துமீறிய நிர்வாகிகளை களை எடுங்கள்; அதன் பின், தேர்தலை சந்தியுங்கள்...' என, கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி பேட்டி: பெண்கள் பிரச்னையை முன்னிறுத்தி, தேர்தலை சந்திக்க உள்ளோம். தி.மு.க., தேர்தல் அறிக்கையில், பெண்கள் நலனுக்காக பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.
'அப்பா, காங்கிரஸ்காரர்; நீங்கள், பா.ஜ.,வில் சேர்ந்துள்ளீர்களே; அதற்கான காரணத்தை விளங்குவீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ.,வில் இணைந்துள்ள நடிகர் சிவாஜிகணேசனின் மகன் ராம்குமார் பேட்டி: நான் இப்போது தான் நேரடி அரசியலுக்கு வந்துள்ளேன். ஆனால், 1972 முதல், அப்பாவுடன் அரசியலை சந்தித்துள்ளேன். அதுமட்டுமின்றி, காமராஜர், எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ராஜிவ் போன்ற ஆளுமைகளுடன் பழகிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
'இதில் அதிர்ச்சிக்கு என்ன இருக்கிறது; திருவள்ளுவர் இப்படித் தான் இருந்தார் என ஏதாவது சான்று காட்ட முடியுமா; ஓவியருக்கு தெரிந்த வகையில், வரைந்துள்ளார். வேலையில்லாத சில தலைவர்கள் இதை பெரிதுபடுத்துகின்றனர்; நீங்களுமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அறிக்கை: தமிழரின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய திருவள்ளுவரை, சி.பி.எஸ்.இ., எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில், குடுமி வைத்து, காவி உடை அணிவித்து, கோவில் குருக்கள் போன்ற தோற்றத்தில் படம் வெளியிட்டிருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது.
'போனாலும் அ.தி.மு.க., அரசு தானே போகும்... உங்களுக்கு ஏன் ஜுரம் அடிக்குது...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை: புதுச்சேரியில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து, அரசியல் கட்சிகளும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இதை, தமிழகத்திலும் விரிவுபடுத்துவர். புதுச்சேரியில் நடப்பது, தமிழகத்திற்கான ஒத்திகையே என்பதை அறிய முடிகிறது.
'பள்ளிகளில் பால் வழங்கலாம்; அதன் மூலம், பால் உற்பத்தியாளர் பலன் பெறுவர்; நல்லது தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், பால் உற்பத்தியாளர் நலச்சங்க பொதுச்செயலர் ராஜேந்திரன் அறிக்கை: பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தில் பால் வழங்க, அரசு உத்தரவிட வேண்டும். ஆவினில் ஏற்பட்டுள்ள பால் பவுடர் தேக்கத்தால், உற்பத்தியாளர்களுக்கு, 350 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. அதை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE