புதுடில்லி:தமிழகத்தின், ராதாபுரம் சட்டசபை தொகுதி மறு ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக, அறிக்கை தாக்கல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில், ராதாபுரம் சட்டசபை தொகுதி உள்ளது. 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் இன்பதுரையும், தி.மு.க., சார்பில் அப்பாவும் போட்டியிட்டனர்.
மேல்முறையீடு
ஓட்டு எண்ணிக்கையின் இறுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் இன்பதுரை, 49 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து மறு ஓட்டு எண்ணிக்கைக்கு உத்தரவிடக் கோரி, அப்பாவு தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், தபால் ஓட்டுக்கள் மற்றும் 34 ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டது.
இதை எதிர்த்து,இன்பதுரை,உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மறு ஓட்டு எண்ணிக்கை நடத்தலாம் என்றும், முடிவை அறிவிக்க கூடாது என்றும், 2019ல் உத்தரவிட்டது.இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ரிஷிகேஷ் ராய் அமர்வு முன், இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அப்பாவு தரப்பில் ஆஜரான தி.மு.க., வழக்கறிஞர் வில்சன் கூறியதாவது:மறு ஓட்டு எண்ணிக்கையில், 203 தபால் ஓட்டுக்கள் மீண்டும் எண்ணப்பட்டன. இதில், தி.மு.க., வேட்பாளர் அப்பாவு முன்னிலை வகித்தார். மக்களின் விருப்பம் இல்லாமலேயே, அ.தி.மு.க.,வின் இன்பதுரை, நான்காண்டுக்கு மேலாக எம்.எல்.ஏ., பதவி வகித்து வருகிறார்.
'நோட்டீஸ்'
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், மறு ஓட்டு எண்ணிக்கையின் முடிவை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் வாதிட்டார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ராதாபுரம் சட்டசபை தொகுதியில் நடந்த மறு ஓட்டு எண்ணிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE