கடலுார் : கடலுார், முதுநகர், துறைமுகப் பகுதியில் ஸ்டீல் மற்றும் பைபரில் மீன்பிடி விசைப்படகுகள்தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கடலுார் மாவட்டம், நல்லவாடு முதல் தா.சோ.பேட்டை வரை 49 மீனவ கிராமங்களை உள்ளடக்கிய 57.5 கி.மீ., நீள கடற்கரை கொண்டது.மாவட்டத்தில் 250 விசைப்படகுகள் மற்றும் சிறு படகுகள், கட்டுமரங்கள் உட்பட 2,500 படகுகள் உள்ளன. 50 ஆயிரம் மீனவர்களில் 24 ஆயிரம் பேர் நேரடியாக மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். 15 ஆயிரம் மீனவ மகளிர் மீன்பிடிப்பு சார்ந்த தொழில் செய்து வருகின்றனர்.விசைப்படகு மீன்பிடி துறைமுகங்கள் கடலுார் முதுநகர், பரங்கிப்பேட்டை அன்னங்கோவில்; முடசல்ஓடை, சாமியார்பேட்டை, எம்.ஜி.ஆர்., திட்டு, பேட்டோடை உள்ளிட்ட பகுதிகளில் சிறிய மீன்பிடி தளங்களும் உள்ளன.
இப்பகுதிகளில் இருந்து ஆண்டுதோறும் 25 ஆயிரம் டன் மீன்கள் பிடிக்கப்பட்டு, உள்ளூர், வெளி மாவட்டங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் மீன்கள் அனுப்பப்படுகிறது.இந்நிலையில், கடலுார், முதுநகர், துறைமுகம் மற்றும் தைக்கால் தோணித்துறை பகுதிகளில் பரவனாறு கரையோரம் மீன்பிடி விசைப் படகுகள், சரக்கு ஏற்றிச் செல்லும் கோட்டியா போன்றவை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.ஆரம்பத்தில் கோங்கு, இலுப்பை, வேம்பு உள்ளிட்ட மரங்களால் மட்டுமே மீன்பிடி படகுகள் செய்யப்பட்டு வந்தன. தற்போது, ஸ்டீல் மற்றும் பைபரில் 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் செய்யப்பட்டு வருகின்றன.மேலும், சுசுகி வகை போட்டுகள், லம்பாடி போன்றவைகளும் தயாரிக்கப்படுகின்றன.
சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரை கோரி உட்பட பல பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக 8 மாதங்களுக்கு மேல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பணிகள் மீண்டும் துவங்கி, தீவிரமாக நடக்கிறது.இது குறித்து படகு செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், 'மலேஷியா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோங்கு மரங்கள் ஏற்றி வரப்பட்டு, விசைப் படகுகள் செய்யப்பட்டன. சுனாமி, புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் இவ்வகை படகுகள் எளிதில் சேதமடைகின்றன.
இவற்றை தவிர்க்கவும்; மரம் தட்டுப்பாடும் உள்ளதால், தற்போது மாற்று வழியாக ஸ்டீல் மற்றும் பைபரில் விசைப் படகுகள் தயாரிக்கப்படுகின்றன.படகுகளின் நீளம் 60 முதல் 70 அடி வரையும், அகலம் 20-21 அடியும், உயரம் 20 அடி வரையும் இருக்கும். இவற்றில் 10 டன்கள் வரை பொருட்களை கொண்டு செல்லலாம்.ஸ்டீல் வகை படகுகள் தயாரிக்க ரூ. 90 லட்சம் வரையும், பைபர் படகுகள் தயாரிக்க ரூ. 60 லட்சம் வரையும் செலவாகிறது.இங்கு தற்போது கடலுார் மட்டுமின்றி புதுச்சேரி, விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர்களும் வந்து, படகுகளை வாங்கிச் செல்கின்றனர்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE