வேப்பூர் : வேப்பூர் ஊராட்சி வாரச்சந்தை கட்டண வசூலுக்கான ஏலம், 2வது முறையாக ரத்து செய்யப்பட்டது.
வேப்பூரில் வாரச்சந்தை வெள்ளிக்கிழமை தோறும் நடக்கிறது. இங்கு, பல மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடுகள், மீன்கள், காய்கறிகளை குறைந்த விலையில் விற்கின்றனர். பண்டிகை காலங்களில் ரூ. 5 கோடி வரை ஆடுகளை விற்று, பெங்களுரு, வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.ஆண்டுதோறும் மார்ச் மாதம் வாரச்சந்தை கட்டண வசூலுக்கான குத்தகைக் காலம் முடிந்து, வேப்பூர் ஊராட்சி சார்பில் ஏலம் விடப்படும். நடப்பாண்டுக்கான ஏலம், கடந்த 18ம் தேதி நடந்ததில், மறு ஏலத்தொகை யாரும் கேட்காததால், ஏலம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று பகல் 11:00 மணியளவில் வேப்பூர் ஊராட்சி தலைவர் மகேஸ்வரி திருஞானம் தலைமையில் ஏலம் நடந்தது. துணை தலைவர் மஞ்சுளா செல்வராஜ், துணை பி.டி.ஓ., திலகவதி, ஊராட்சி செயலர் வெங்கடேசன், வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர். இதில், பங்கேற்ற குத்தகைதாரர்கள் ஏலம் ஆரம்ப தொகை அதிகமாக உள்ளதாக கூறி, சான்றிதழ் வழங்கவில்லை. இதனால், பகல் 1:00 மணியளவில், வாரச்சந்தை ஏலம் ரத்து செய்வதாக ஊராட்சி தலைவர் மகேஸ்வரி திருஞானம் அறிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE