விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் டிஜிட்டல் பேனர்களின் கலாசாரம் தலை துாக்கியுள்ளதால், விபத்து அபாயம் நிலவி வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அரசியல் கட்சியினர் மெகா அளவில் டிஜிட்டல் பேனர்கள் வைத்து வந்தனர்.அரசியல் கட்சிகளுக்கு போட்டியாக தனி நபர்களும் கண்ணீர் அஞ்சலி, தங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு பொது இடங்களில் சாலை ஓரங்களில் பிரமாண்டமாக டிஜிட்டல் பேனர் வைப்பது சம்பிரதாயமாகியது. வரைமுறை யின்றியும், போதிய பாதுகாப்பின்றி வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள் பல இடங்களில் முறிந்து விழுந்து பலர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு சென்னையில், டிஜிட்டல் பேனர் சரிந்து விழுந்ததில், ஸ்கூட்டரில் சென்ற பெண் இன்ஜினியர் இறந்தார்.இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னை, உயர்நீதிமன்றம் டிஜிட்டல் பேனர் கலாசாரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதனை மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு, ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டது.உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவைத் தொடர்ந்து பொது இடங்களில் இருந்த டிஜிட்டல் பேனர்களை போலீசார் அகற்றினர்.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்திலும் டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டது. இந்த நிலை சில மாதங்கள் மட்டுமே நீடித்தது.அதன்பிறகு போலீசார் இப்பிரச்னையில் கவனம் செலுத்த வில்லை. இதனால், மெல்ல தலை துாக்கிய டிஜிட்டல் பேனர் கலாசாரம் தற்போது, மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.பஸ் நிலையம், கடை வீதி என மக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தும் டிஜிட்டல் பேனர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வர உள்ளதால், அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு மிகப் பிரமாண்டமான அளவுகளில் டிஜிட்டல் பேனர்கள் வைத்து வருகின்றனர்.
இதனால், இவ்வழியே மக்கள் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது. எனவே, பொது இடங்களில் மக்களை அச்சுறுத்தும் வகையில் டிஜிட்டல் பேனர் வைப்போர் மீது, உயர்நீதிமன்ற உத்தரவின்படி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE