வால்பாறை:வால்பாறை அருகே, வனத்துறை சோதனைச்சாவடியில் போதிய அடிப்படை வசதி இல்லாததால், ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறையில், மானாம்பள்ளி மற்றும் வால்பாறை ஆகிய இரண்டு வனச்சரகங்கள் உள்ளன. வால்பாறை அடுத்துள்ள சின்கோனா டான்டீ (மானாம்பள்ளி வனச்சரகம்) வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் (டான்டீ) கட்டுப்பாட்டில் இருந்த இந்த பகுதி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வனத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.இதனையடுத்து, டான்டீ வசம் இருந்த இடத்தில், நான்காயிரம் ஏக்கர் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, மூவாயிரம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே தேயிலை பயிரிடப்பட்டுள்ளது.இங்கு, வனவிலங்கு - மனித மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில், தற்போது, 600 தொழிலாளர்கள் மட்டுமே தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், சின்கோனா (டான்டீ) செல்லும் நுழைவுவாயிலில் வனத்துறை சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான அறையில் தான் வனத்துறையினர் நாள் முழுவதும் இருக்க வேண்டும். இரவு நேரத்தில், சோதனைச்சாவடி பகுதிக்குள் யானைகள் நுழைந்தால், ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்கக்கூட வசதி இல்லாமல் இரவு நேரத்தில் பணியாற்றுகின்றனர். இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சின்கோனா வனத்துறை சோதனைச்சாவடி விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்த பின், சோதனைச்சாவடி விரிவுபடுத்தப்படும். சோதனைச்சாவடி அருகே உள்ள வனத்துறை ஊழியர்கள் குடியிருப்பு பகுதிக்கு அடிக்கடி யானைகள் வந்து, வீடுகளை இடித்து சேதப்படுத்துவதால், வனத்துறையினர் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.சோதனைச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போதிய குடியிருப்பு வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. ஏற்கனவே, கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத குடியிருப்புக்கள் தற்போது மீண்டும் சீரமைக்கப்படுகிறது. பணி நிறைவடைந்த பின் வனத்துறை ஊழியர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE