பொது செய்தி

இந்தியா

உலகின் உற்பத்தி மையமாக இந்தியா:'நிடி ஆயோக்' வழிகாட்டுதல்

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
நம் நாட்டை, உலகின் உற்பத்தி மையமாக மாற்றும் வகையில், பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்க்க, உற்பத்தியை அதிகரிக்க, வேலைவாய்ப்புகளை பெருக்க மற்றும் ஏற்றுமதியை உயர்த்த, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும், 'நிடி ஆயோக்' அமைப்பு விரிவான வழிமுறைகளை வகுத்துள்ளது. இந்த இலக்கை எட்ட, மாநில அரசுகள் என்னென்ன செய்ய வேண்டும் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.வளர்ச்சி திட்டங்களை
niti aayog, states, Govt, உலகின் உற்பத்தி மையம், இந்தியா,.இதெல்லாம் செய்யுங்கள்!மாநில அரசுகள், 'நிடி ஆயோக்' வழிகாட்டுதல்

நம் நாட்டை, உலகின் உற்பத்தி மையமாக மாற்றும் வகையில், பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்க்க, உற்பத்தியை அதிகரிக்க, வேலைவாய்ப்புகளை பெருக்க மற்றும் ஏற்றுமதியை உயர்த்த, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும், 'நிடி ஆயோக்' அமைப்பு விரிவான வழிமுறைகளை வகுத்துள்ளது. இந்த இலக்கை எட்ட, மாநில அரசுகள் என்னென்ன செய்ய வேண்டும் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வளர்ச்சி திட்டங்களை வகுக்கவும், செயல்படுத்தவும், மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிடி ஆயோக் அமைப்பின் நிர்வாக கவுன்சில் கூட்டம், சமீபத்தில் நடந்தது. இந்த கவுன்சிலில், அனைத்து மாநில முதல்வர்கள், மத்திய அரசின் முக்கிய துறைகளின் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். சமீபத்தில் நடந்த கூட்டத்தில், மாநில முதல்வர்கள் இடையே, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.'நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த, வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதில், மத்திய - மாநில அரசுகள் ஒத்துழைத்து செயல்பட வேண்டும்' என, அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, மாநில அரசுகள் மற்றும் மத்திய அமைச்சகங்கள், துறைகளுடன் நடத்திய ஆலோசனைகளின் அடிப்படையில், நிடி ஆயோக் விரிவான திட்டத்தை வகுத்துள்ளது. உலகின் உற்பத்தி மையமாக நம் நாட்டை மாற்றுவது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது நடைமுறையில் உள்ள சிக்கல்கள், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.


மாற்று வழிமுறை


குறிப்பாக, தொழில் துவங்குவதற்கு தடையாக உள்ள அனுமதி அளிக்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்றும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் நடைமுறையை மேம்படுத்துவது குறித்தும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு மாநிலமும், இரண்டு முக்கிய நகரங்களை தேர்வு செய்ய வேண்டும். அவற்றை தொழில் நகரங்களாக மாற்றுவதற்கான வழிமுறைகளை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும்.

தொழில் துவங்குவதற்கு விண்ணப்பித்த, 45 நாட்களுக்குள் அனுமதி அளிக்க வேண்டும்; விண்ணப்பித்த, 15 நாட்களில், மின் இணைப்பு தர வேண்டும்; உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்பாக, 90 சதவீத நிலம் கையகப்படுத்திட வேண்டும் என்பவை, நிடி ஆயோக் வகுத்து உள்ள நடைமுறைகளின் முக்கிய அம்சம்.இது குறித்து, நிடி ஆயோக் அமைப்பு வழங்கிஉள்ள பரிந்துரை மற்றும் ஆலோசனையில் கூறப்பட்டுள்ளதாவது:


நடைமுறை எளிமை


தொழில் துவங்குவதை ஊக்குவிக்கும் வகையில், தங்கள் மாநிலத்தின் முக்கியமான தொழில் வாய்ப்புள்ள துறைகளை மாநில அரசுகள் அடையாளம் காண வேண்டும். அந்தத் துறைகளில் முதலீடுகள் பெறுவது, வேலைவாய்ப்பு, ஏற்றுமதி வாய்ப்புகளை அடையாளம் காண, நிபுணர்கள் அடங்கிய சிறப்பு செயற்குழுக்களை உருவாக்க வேண்டும்.

இந்த நடைமுறைகள் அனைத்தையும், வரும், ஆக., 15க்குள் முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் துவங்க அனுமதி அளிப்பது உள்ளிட்டவற்றில் உள்ள சிக்கல்களுக்கு, மார்ச், 15க்குள் தீர்வு காண வேண்டும்.தொழில்கள் சிறப்பாக நடக்க தடையாக உள்ள சட்டங்களை அடையாளம் காண்பது, தேவையான திருத்தம் செய்வது, தேவையில்லாத சட்டங்களை நீக்குவது போன்ற நடவடிக்கைகளை, ஆக., 15க்குள் முடிக்கவும், மாநிலங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


நில நிர்வாகம்


தொழில் மையங்களாக மாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இரண்டு நகரங்களில், நில நிர்வாகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.நில உரிமை தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்கும் சட்டம் கொண்டு வர வேண்டும். நிலம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும், 'டிஜிட்டல்' மயமாக்க வேண்டும். குறைந்தபட்சம், 30 ஆண்டுகளுக்கான ஆவணங்களை, 'ஆன்லைனில்' பெறும் வசதி இருக்க வேண்டும்.அதேபோல், கட்டடம் கட்டுமானத்துக்கான அனுமதியை, ஆன்லைனில் பெறும் வசதி இருக்க வேண்டும். விண்ணப்பித்த, 45 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.


உள்கட்டமைப்பு வசதி


தேசிய உள்கட்டமைப்பு திட்டங்களை மத்திய அரசு அறிவித்தாலும், அதற்கு நிலம் கையகப்படுத்துவது மிகப் பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், வழக்குகள் என, சட்டப் பிரச்னைகளையும் சந்திக்க நேரிடுகிறது.இதை தவிர்க்க, ஒரு திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கும் முன் அல்லது கட்டுமானம் துவங்கும் முன், திட்டத்துக்கு தேவையான நிலத்தில், 90 சதவீதத்தை, மாநில அரசு கையகப்படுத்தியிருக்க வேண்டும்.

ஒவ்வொரு திட்டத்திலும், அதில் ஏற்படக் கூடிய பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் குறித்து ஆலோசனை வழங்க, ஒரு இன்ஜினியரை நியமிக்க வேண்டும். மேலும், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, இரண்டு அல்லது மூன்று ஆலோசனை குழுக்களை நியமிக்கலாம். அதில், தனி அதிகாரம் உள்ள நிபுணர்கள், உயர் நீதிமன்ற நீதிபதி ஆகியோர், அதில் இடம் பெறலாம். சிவில் நீதிமன்றங்களை, சிறப்பு நீதிமன்றங்களாக அமைக்கலாம்.

டிரக் டிரைவர்களுக்கான பற்றாக்குறை அதிகம் உள்ளது. அதை ஈடு செய்யும் வகையில், டிரக் டிரைவர்களுக்கான பயிற்சிகள் வழங்கவும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, நிடி ஆயோக் அமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகளில் பல ஆலோசனைகள், பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


டாப் - 5 மாநிலங்கள்


தொழில் துவங்க மிகச் சிறந்த ஐந்து மாநிலங்கள் பட்டியலையும், நிடி ஆயோக் தயாரித்துள்ளது. அதன்படி, 2,920 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து, குஜராத் முதலிடத்தில் உள்ளது. மஹாராஷ்டிராவில், 2,736 நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகம், 2,136 நிறுவனங்களுடன், மூன்றாவது இடத்தில் உள்ளது. உத்தர பிரதேசத்தில், 2,054 நிறுவனங்களும், கர்நாடகாவில், 1,980 நிறுவனங்களும் உள்ளன.

- நமது சிறப்பு நிருபர் -


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
24-பிப்-202102:27:14 IST Report Abuse
கும்புடுறேன் சாமி மத்த நாடுகள்ல மனிதர்கள் உற்பத்தியை பெறுக்கி உலகத்துக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வார்கள் ஆனா இந்தியால மட்டும்தான் மனிதர்களின் உற்பத்தியையே மனிதர்கள் பெருக்கி உலகத்துக்கு மனிதர்களை ஏற்றுமதி செய்வார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X