கேப் கேனவரல்:அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான, 'நாசா' அனுப்பியுள்ள, 'ரோவர்' எனப்படும், ஆய்வு வாகனம், செவ்வாய் கிரகத்தில் இருந்து அனுப்பியுள்ள படங்கள் மற்றும், 'வீடியோ' மிகத் தெளிவாக உள்ளதால், விஞ்ஞானிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஆராய்ச்சி
செவ்வாய் கிரகத்துக்கு, கடந்தாண்டு ஜூலையில் நாசா அனுப்பிய விண்கலத்தில் இருந்து, 'ரோவர்' எனப்படும், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஆய்வு செய்யும் ரோந்து வாகனம், சமீபத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.அந்த ஆய்வு வாகனம், பல்வேறு புகைப் படங்களையும், 'வீடியோ'க்களையும் அனுப்பி வைத்துள்ளது.
இது குறித்து, நாசா விஞ்ஞானிகள் கூறிஉள்ளதாவது:எங்கள் கனவின் ஒரு பகுதிதான், இந்த படங்கள். செவ்வாய் கிரகத்தில், 400 கோடி ஆண்டுகளுக்கு முன் உயிரினங்கள் வாழ்ந்ததாக கருதப்படுகிறது. அதை உறுதி செய்வதற்காக இந்த ஆய்வு வாகனம் ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது.ஒரு செவ்வாய் கிரக ஆண்டு, அதாவது, பூமியைப் பொறுத்தவரை, இரண்டு ஆண்டுகள், அங்கு இந்த வாகனம் ஆய்வில் ஈடுபடும்.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள மண், கற்கள் உள்ளிட்டவை சேகரிக்கப்படும். அதே போல், அங்கு துளையிட்டும் ஆய்வுகளை மேற்கொள்ளும்.காற்று வீசும் ஓசை இந்த ஆய்வு வாகனத்தில், ஆறு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில், ஐந்து சிறப்பாக வேலை செய்கின்றன. பல்வேறு கோணங்களில் இருந்து, செவ்வாய் கிரகத்தில் ஆய்வு வாகனம் தரையிறங்குவது தொடர்பாக எடுத்துள்ள வீடியோ, மிகத் துல்லியமாக உள்ளது.
ஆய்வு வாகனத்தில் இருந்த ஒரு, 'மைக்' முதலில் வேலை செய்ய வில்லை. பின், அது செயல் படத் துவங்கியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் காற்று வீசுவது போன்ற ஓசை உள்ளிட்டவை தற்போது கிடைத்துள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE