நிதிக்குழு பரிந்துரையால் தமிழகத்திற்கு பாதிப்பு: ஓ.பி.எஸ்.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிதிக்குழு பரிந்துரையால் தமிழகத்திற்கு பாதிப்பு: ஓ.பி.எஸ்.,

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 23, 2021 | கருத்துகள் (8)
Share
சென்னை: ''தமிழகத்திற்கான மானியத்தின் பங்கு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது,'' என, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தெரிவித்தார். தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பி.எஸ்., 2021 - 22ம் நிதியாண்டிற்கான, இடைக்கால பட்ஜெட்டை, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார்.நிலக்குழுவில் அநீதிஅப்போது, அவர் பேசியதாவது: மத்திய அரசு நியமித்த, 15வது நிதிக்குழுவின் இறுதி அறிக்கை,
நிதிக்குழு பரிந்துரை, தமிழகம், பாதிப்பு, ஓ.பி.எஸ்., துணை முதல்வர்,

சென்னை: ''தமிழகத்திற்கான மானியத்தின் பங்கு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது,'' என, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தெரிவித்தார்.
தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பி.எஸ்., 2021 - 22ம் நிதியாண்டிற்கான, இடைக்கால பட்ஜெட்டை, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார்.



நிலக்குழுவில் அநீதி


அப்போது, அவர் பேசியதாவது: மத்திய அரசு நியமித்த, 15வது நிதிக்குழுவின் இறுதி அறிக்கை, தமிழகத்தின் நியாயமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. 14வது நிதிக்குழுவில் இழைக்கப்பட்ட அநீதியையும் சரி செய்யவில்லை.நடப்பு நிதியாண்டில், தமிழகத்திற்கான வருவாய் பற்றாக்குறை மானியமான, 4,025 கோடி ரூபாயை வழங்க, முதல் முறையாக இடைக்கால அறிக்கை பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இறுதி அறிக்கையில், அது, 2,204 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது. இத்தொகை, 2021 - 22ம் ஆண்டிற்கு மட்டுமே வழங்கப்படும்.
தமிழகத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட, மொத்த உள்ளாட்சி மானியத்தொகை, 2020 - 21ம் ஆண்டில், 5,344 கோடியாக இருந்தது.

இது, 2021 - 22ம் ஆண்டில், 3,979 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.மேலும், 14வது நிதிக்குழு பரிந்துரைத்ததை விட, தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான, மொத்த மானியத்தொகை, 15வது நிதிக்குழு பரிந்துரைகளில், கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.முந்தைய நிதிக்குழு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு பரிந்துரைத்த, ஒட்டுமொத்த மானியத் தொகையில், நிபந்தனையில்லாத மானியத்தின் பங்கு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 80 சதவீதத்தில் இருந்து, 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள மானியங்கள், செயல்திறன் மானியமாகவும், ஊக்க மானியமாகவும், நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிக்கப்படும். முந்தைய அனுபவத்தால், இந்த மானியங்கள், உரிய நேரத்தில் விடுவிக்கப்படுமா என்ற, சந்தேகம் உள்ளது.கடந்த, 14வது நிதிக்குழு பரிந்துரைகளின்படி, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 548.76 கோடி ரூபாய் அடிப்படை மானியம்; 2,029.02 கோடி ரூபாய் செயல்திறன் மானியம் வழங்கப்பட வேண்டும். அது, மத்திய அரசால் இதுவரை விடுவிக்கப்படவில்லை.


வலியுறுத்தல்



பெரும்பாலான மாநிலங்களுக்கு, 14வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட செயல்திறன் மானியம், 2017 - 18 முதல், மத்திய அரசால் விடுவிக்கப்படவில்லை. இதை, காலதாமதமின்றி, மத்திய அரசு விடுவிக்க வேண்டும்.மத்திய அரசின் திட்டங்களுக்கு, மத்திய அரசின் பங்கிற்கு பதிலாக, 15வது நிதிக்குழு பரிந்துரைத்த மானியங்களை பயன்படுத்த வேண்டாம் என, மத்திய அரசை வலியுறுத்துகிறோம். மாநிலங்களுக்கு நிதித்துறை பரிந்துரைத்த மானியங்களை, எந்த ஒரு கூடுதல் நிபந்தனைகளும் விதிக்காமல், மாநிலங்களுக்கு நேரடியாக, மத்திய அரசு விடுவிக்க வேண்டும்.


48 சதவீதம் வளர்ச்சி



பெட்ரோல், டீசல் மீதான பல்வேறு வரிகள் காரணமாக, மத்திய அரசின் வருவாய், 2019ம் ஆண்டை ஒப்பிடும் போது, 2020ல், 48 சதவீதம் வளர்ச்சி அடைந்தது. இதே காலகட்டத்தில், தமிழகத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான ஆயத்தீர்வை பங்கு குறைந்து, 39.40 சதவீதம் மட்டும் பெறப்பட்டுள்ளது. அதேபோல, தனி நபர் வருமான வரி மீதான கூடுதல் கட்டணம் மேலும் விரிவாக்கப்பட்டு, மத்திய அரசுக்கு பெரும் வருவாயை அளித்து வருகிறது. அந்த வருவாயில் இருந்து, மாநிலங்களுக்கு எந்தவிதமான பங்கும் கிடைப்பதில்லை. மாநிலங்கள் தங்களுக்குரிய வருவாயின் பங்கை பெறுவதை, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு, ஓ.பி.எஸ்., பேசினார்.


கலர் சட்டைக்கு மாறிய ஓ.பி.எஸ்



துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அதிகமாக, வெளிர் மஞ்சள் நிற சட்டை அணிய துவங்கி உள்ளார்.
பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மஞ்சள் நிற சட்டை அணிவதை, வழக்கமாக்கி உள்ளார். எப்போதும், வெள்ளை சட்டை அணியும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்., வெளிர் மஞ்சள் நிற சட்டை அணிய துவங்கி உள்ளார். ஜோதிடர்கள் ஆலோசனைப்படியே, அவர், வெளிர் மஞ்சள் நிற சட்டை அணிவதாக கூறப்படுகிறது. அவருக்கு நெருக்கமானவர்களோ, 'அந்தச் சட்டை, நன்றாக இருப்பதாக பலர் கூறியதால், அதை, அதிகம் அணிய துவங்கி உள்ளார்' என்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X