புதுடில்லி:பிரதமர் மோடி சூசகமாக தெரிவித்ததையடுத்து, தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் தேதிகள், அடுத்த மாதம், முதல் வாரம் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நலத்திட்டம்
தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல், ஏப்ரல், மே மாதத்தில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அசாம் மாநிலத்துக்கு சென்ற பிரதமர் மோடி, பேசுகையில், 'கடந்த, 2016ல், இந்த ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை, மார்ச், 4ல் தேர்தல் ஆணையம் அறிவித்தது. 'இம்முறை, மார்ச், முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்பது என் யூகம். தேர்தல் தேதிகளை முடிவு செய்ய வேண்டியது தேர்தல் ஆணையம் தான்' என்றார்.
டில்லியில், ஐந்து மாநில சட்டசபை தேர்தல் குறித்து, தேர்தல் ஆணையத்தின் இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் துவங்கியது.தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணையர்கள் சுஷில் சந்திரா மற்றும் ராஜிவ் குமார் ஆகியோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில், ஐந்து மாநிலங்களுக்கும், பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவ படையை அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக, தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிர்பார்ப்பு
இன்று நடக்கும் கூட்டத்தில், ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இன்றே தேதி அறிவிக்கலாம் என ஆணையர் ஏற்பாடு செய்திருந்த நிலையில், அது நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.மார்ச் முதல் வாரத்தில், அல்லது அதற்கு முன்பே, தேர்தல் ஆணையம் தெரிவிக்குமா என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE