பள்ளியில் படிக்கும்போது பல மாணவர்களுக்கும் விளையாட்டுத்தனம் தான் மனம் முழுதும் மேலோங்கி இருக்கிறது.எதையுமே அதற்குரிய காலம் கடந்த பின் வருத்தப்படுவதுதான் பெரும்பாலானோரின் பழக்கம். காரணம் அந்த நேரத்தில் நமக்கு சரியான வழிகாட்டுதல் இருந்திருக்காது. ஓரு வேளை நல்ல வழிகாட்டுதல் கிடைத்திருந்தாலும் அதனை பயன்படுத்த தவறியிருப்பார்கள். சரியான வழிகாட்டுதல் என்பது நம்மால் எது எளிதாக, வெற்றிகரமாக செய்ய முடியும் என்பதேயாகும். அவ்வாறு, சரியான திட்டமிடுதலோ, வழிகாட்டுதலோ இல்லாமல் இருக்கும் மாணவர்களுக்கு அவ்வப்போது சிறிது கலக்கம் வரும்.ஏனெனில், அந்த நேரத்தில் சற்று அதிகமாக எதிர்காலத்தைப்பற்றி வீட்டிலும், உறவினர்கள் மத்தியிலும், விபரமான நண்பர்களிடமிருந்தும் பேச்சு வரும். நன்கு படிக்கின்ற மாணவர்கள் எல்லாம் பொறியியலாளர்களாக, மருத்துவர்களாக சேவை புரிவோம் என்றும் பெருமிதம் கொள்வர். ஆனால், சரிவர படிக்காத மாணவர்கள் அதிகமான பேர் தேர்வு முடிவுகள் வந்தவுடன் எதிர்காலத்தை தீர்மானம் செய்துகொள்ளலாம் என்று எதிர்காலம் பற்றிய தீர்வை சற்று தள்ளி வைப்பர். ஒவ்வொருவருக்கும் தனித்துவமான குணங்கள், செயல்பாடுகள் இருக்கும். அதனை கண்டறிந்து, அதன்படி நம் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும். அதன்படி, எண்ணங்களுக்கு ஏற்ற துறை சார்ந்த படிப்பிற்கு பள்ளிப் பருவத்தில் இருந்தே தயாராகலாம். அதிக மதிப்பெண்கள் பெறுவது சிறந்ததுதான் என்றாலும். எண்களின் மேல் கவனத்தைக்கொள்ளாமல் லட்சியத்தை நினைத்து படிக்க வேண்டும்.அதற்காக, குறைவான மதிப்பெண்கள் எடுத்தாலும் போதும் என்பது அர்த்தம் அல்ல. பதற்றம் மிகுந்த தேர்வு நேரத்தை தன்னம்பிக்கை மிகுந்த காலமாக மனதளவில் மாற்றி, அதன் மூலம் அதிக மதிப்பெண்களை பெற வைப்பதற்கான மாற்று வழி இது என்றும் வைத்துக்கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE