மனதை ஒருமுகப்படுத்தி படிப்பது என்பது மாணவர்கள் பலருக்கும் சவாலான விஷயமாகவே உள்ளது. இந்த உலகில் இடைஞ்சல் இல்லாத விஷயம் என்று எதுவுமே கிடையாது.எந்த பொருளுமே இல்லாத ஒரு அறையில் கூட, காற்றும், அரை முழுவதும் கண்ணுக்கு தெரியாத தூசி துகள்களும் இருக்கும். அமைதியான ஒரு சிறு குளத்தில் கூட, தொடர்ச்சியாக காற்று உரசிக்கொண்டே இருக்கும் மற்றும் சூரிய வெப்பத்தின் விளைவுகள் இருக்கும். எனவே இந்த உலகில் நம்மை எதுவுமே தொந்தரவு செய்யக்கூடாது என்று நம்மால் நினைக்க முடியாது.ஏதாவது ஒரு இடைஞ்சல் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த இடைஞ்சல் சிறிதாக இருக்குமாறும், அதிகரிக்காமலும் நம்மால் பார்த்துக்கொள்ள முடியும். அந்த இடைஞ்சலின் மூலம் நாம் மனம் தடுமாறாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே அந்த நுணுக்கங்களை மாணவர்கள் கற்றுக்கொண்டால், நன்கு படித்து தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும். முதலில் நமது மனம் அமைதியாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு விஷயத்தைப் போட்டு குழப்பிக்கொண்டே இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் படிக்க முடியாது. நமக்கு அன்றைய தினம் ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடந்திருக்கலாம் அல்லது ஒரு புதிய சிக்கல் நம் கணக்கில் சேர்ந்திருக்கலாம். எனவே அதை நினைத்து கவலைப்பட்டுக்கொண்டே இருந்தால் ஆகப்போவது ஒன்றுமே இல்லை. சிந்தனைகள் நிரம்பிய மனம் ஒரு கொந்தளிக்கும் கடலைப் போன்றது. மனதை அமைதிப்படுத்த தியானம் செய்யலாம். யோகாசனம் செய்யலாம். இறை நம்பிக்கை உடையவர்கள் வழிபாட்டில் ஈடுபடலாம். அமைதியான மனதுடன் படிப்பதற்கு அமர வேண்டும். நாம் படிப்பதற்கு அமரும் இடம் இடையூறுகளிலிருந்து அறுபட்டதாய் இருக்க வேண்டும். குறிப்பிட்ட இடமானது எந்த நேரத்தில் தொந்தரவு இல்லாமல் இருக்கும் என்பதை அறிந்து அதற்கேற்ப வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வேறு ஏதேனும் தனி இடங்களுக்கோ அல்லது நண்பர்களின் வீடுகளுக்கோ செல்லலாம். அதேசமயம், ஒரு இடத்தை தேர்வுசெய்து விட்டால், அந்த இடத்தை தேவையின்றி அடிக்கடி மாற்றக்கூடாது. மேலும், நீங்கள் படிப்பதற்கு என்று தேர்ந்தெடுத்த இடத்தை, முடிந்தளவு வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஒரு இடத்தில் நீங்கள் தொடர்ச்சியாக படிக்க ஆரம்பித்து விட்டால், அதிக கவன சிதறல் இன்றி, நாளாவட்டத்தில் அந்த இடத்தில் படிக்க அமருகையில், படிப்பில் ஒன்றி விடுவீர்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE