திருப்பூர்;திருப்பூர் வடக்கு நகர தி.மு.க., செயலாளர் தினேஷ்குமார். இவரது வீடு, காங்கயம் ரோடு, காங்கயம்பாளையம்புதுார் பகுதியில் உள்ளது. நேற்று, காலை மாநகராட்சி வரி வசூல் ஊழியர்கள் அவரது வீட்டுக்கு சென்றனர்.அவிநாசி ரோட்டில் உள்ள கட்டடத்துக்கு சொத்து வரி நிலுவையில் உள்ளதாகவும் அதை வசூலிக்க வந்ததாகவும் ஊழியர்கள் கூறினர்.மாநகராட்சி ஊழியர்கள் கூறிய, 2.35 லட்சம் ரூபாயை கொடுத்த தினேஷ்குமார், வரி நிலுவை குறித்த நோட்டீஸ் மற்றும் உரிய ரசீதும் தருமாறு கூறினார்.ஆனால், அவர்களிடம் எந்த முழு விவரமும் இல்லை. இதனால், ஆவேசமடைந்த தினேஷ்குமார், ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தார்.இது குறித்து, தினேஷ்குமார் கூறியதாவது:என் பெயரிலோ, குடும்பத்தார் பெயரிலோ இல்லாத சொத்துக்கு வரி வசூலிக்க வந்துள்ளனர். இது அரசியல் ரீதியாக பழி வாங்கும் நடவடிக்கை. 2018ல் என் பெயரில் வாங்கிய சொத்து, தற்போது வேறொருவருக்கு விற்பனை செய்த பின், மண்டலம் விட்டு மண்டலம் வந்து, வரி நிலுவை உள்ளது என்கின்றனர். இதற்கு அதிகாரிகள் உரிய பதில் தர வேண்டும். மாநகராட்சி ஊழியர்களுடன், சம்பந்தமில்லாத நபர்களும் வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.மாநகராட்சி வருவாய் பிரிவினர் கூறியதாவது:இன்று (நேற்று) ஊழியர்கள் வசூலுக்கு நேரில் சென்ற போது அவர்களிடம் உரிய விவரங்கள் இல்லை. அலுவலகத்தில் உள்ள விவரங்களை கொண்டு காட்டி, நிலுவை வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.கட்டடம் விற்பனை செய்த பின்னும் வரிவிதிப்பில் இன்னும் பெயர் மாற்றம் செய்யவில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE