மத்திய அரசின் தேவேந்திர குல வேளாளர் பெயர் அறிவிப்பால், கொங்கு மண்டலத்தில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில், முக்குலத்தோர் ஓட்டுக்களை, அ.ம.மு.க., பிரிக்கக்கூடும். இந்த இரண்டும், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியின் வெற்றியை பாதிக்கும் என, உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இரு சமுதாயத்தினரையும் சரிக்கட்ட வேண்டும்; அதே நேரம் கூட்டணி பலத்தையும் அதிகரிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அ.தி.மு.க.,வுக்கு உருவாகி உள்ளது. எனவே, இதுவரை கண்டு கொள்ளாமல் விட்ட கட்சிகளின் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளது, ஆளும் கட்சி. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, 50 தொகுதிகளில் செல்வாக்கு உள்ளது. லோக்சபா தேர்தலில், 4 சதவீதம் ஓட்டு பெற்றுள்ளது. எனவே, அதை கூட்டணிக்கு இழுத்தால், கொங்கு, தெற்கு ஆகிய இரு மண்டலங்களிலும் பலன் கிடைக்கும் என, அ.தி.மு.க., ஏற்பாடு செய்த சர்வே தெரிவிக்கிறது.
ரகசிய பேச்சு
தி.மு.க.,வும் இதே மாதிரி கணக்கு போட்டு தான் காய் நகர்த்துகிறது. அதை கேள்விப்பட்டு, முதல்வர் ஆச்சரியப்பட்டார் என்ற தகவல், தேர்தல் களத்தில் ஏற்கனவே சொல்லி இருந்தோம். அந்த அடிப்படையில், கமல் கட்சியுடன் பேச்சு நடத்த துவங்கியிருக்கிறது, அ.தி.மு.க., கொங்கு மண்டலத்தை சேர்ந்த, செல்வாக்கான இரு அமைச்சர்கள், கமல் தரப்புடன் ரகசியமாக பேசி வருகின்றனர். மேலும், 20 சீட் வரை ஒதுக்கவும், மொத்த செலவை ஏற்கவும் அ.தி.மு.க., தயாராக இருப்பதாக, கமலுக்கு, 'சிக்னல்' போயிருக்கிறது. பதில் சொல்ல கமல் அவகாசம் கேட்டிருப்பதாக, அ.தி.மு.க., மேலிட வட்டாரங்கள் கூறின.
சீமானுக்கும் வலை வீச்சு
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிகளுக்கு முறையே, 32 மற்றும் 52 சதவீதம் ஓட்டு கிடைத்தது. அந்த, 20 சதவீதத்தை ஈடுகட்டுவதுடன், அதற்கு மேல், அ.தி.மு.க., அணிக்கு தேவை. எனவே, நாம் தமிழர் கட்சியையும் அ.தி.மு.க., கூட்டணியில் சேர்க்க, சீமானுடன் பேச்சு துவங்கி விட்டதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ஊழல் கட்சிகள் என விமர்சித்த கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் அளவுக்கு கமல் சமரசம் செய்வார் என்றால், அவருக்கு மட்டும் அதன் மூலம் ஏதேனும் பலன்கள் கிடைக்கலாம்.
'அந்த முடிவை, கட்சியினர் ஏற்க மாட்டார்கள். எனவே, தொண்டர்கள் விருப்பத்துக்கு மாறாக, அ.தி.மு.க.,வுடன் கூட்டு சேர்ந்த விஜயகாந்துக்கு ஏற்பட்ட நிலை தான் கமலுக்கும் ஏற்படும்' என, வெறுப்புடன் சொன்னார், ஒரு மய்யம் நிர்வாகி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE