அவிநாசி:குடிநீர் இணைப்பு வாங்கி தருவதற்கு, முன் னாள் கவுன்சிலர் பணம் வாங்கியதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் முறைகேடாக வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பு கண்டுபிடிக்கப்பட்டு, அபராத தொகை, வைப்புத்தொகை, முறைப்படுத்துதல் கட்டணம் ஆகியவற்றை பேரூராட்சி நிர்வாகம் சார்பில், வசூல் செய்யப்பட்டு வருகிறது.இதுவரை ஏறத்தாழ, 500 முறைகேடு இணைப்பு கண்டு பிடிக்கப்பட்டு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 11வது வார்டு கணபதி நகரை சேர்ந்த சிலர் அபராத தொகையை செலுத்த மறுத்து வருகின்றனர்.தங்களுக்கு முறையான கட்டணம் வசூலிக்க வேண்டும் என செயல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தியை சந்தித்து மனு கொடுத்தனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், வீதியில் பொது குடிநீர் குழாய் அமைக்க அப்போதைய கவுன்சிலர் பொன்னுசாமி (இந்திய கம்யூ.,) என்பவர் மூலம், 11 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம்.தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள் வந்து பொது குடிநீர் குழாய் அமைத்து கொடுத்தனர்.அதன்பின், வீட்டு இணைப்புக்கு டெபாசிட் தொகையாக 3 ஆயிரம் ரூபாய் செலுத்தினோம். ஆனால், குடிநீர் இணைப்பு முறைகேடானது என, அதிகாரிகள் கூறுகின்றனர். நான்கரை ஆண்டுகளுக்கு பின், 27 ஆயிரத்து 500 ரூபாய் கட்ட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இது குறித்து, கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.பொதுமக்களின் குற்றச்சாட்டு குறித்து, முன்னாள் கவுன்சிலர் பொன்னுசாமி கூறுகையில், ''பேரூராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய தொகையைதான் செலுத்த வலியுறுத்தினேன். நான் எந்தப்பணமும், யாரிடமும் வாங்கவில்லை,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE