புதுடில்லி:குற்றவாளியின் குற்றவியல் ஆவணத்தில் அவருக்காக ஆஜராகும் வழக்கறிஞரின் விபரங்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளிக்கும்படி டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் குறித்த முழு விபரங்களை குற்றவியல் ஆவணத்தில் கட்டாயம் குறிப்பிட வேண்டும்' என மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவிட்டது.இதை எதிர்த்து டில்லியைச் சேர்ந்த முன்னாள் வழக்கறிஞரும் வர்த்தகருமான சவுரப் அகர்வால் என்பவர் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்; அதன் விபரம்:
ஒருவரை கடத்தி பின் அவரது குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிக்கும்படி வடக்கு டில்லியின் சமைபூர் பத்லி போலீஸ் ஸ்டேஷனைச் சேர்ந்த அதிகாரிகள் என்னிடம் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்க மறுத்தேன்.இதையடுத்து பொய்யான திருட்டு வழக்கு ஒன்றில் என்னை சம்பந்தப்படுத்தி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குற்றவியல் ஆவணங்களில் வழக்கறிஞரின் விபரங்களை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் எனக்காக ஆஜராக வழக்கறிஞர்கள் தயங்குகின்றனர். இறுதியில் போலீஸ் அதிகாரிகளுக்கு 6 லட்சம் ரூபாய் கொடுக்க நேரிட்டது.இந்த உத்தரவு தன்னிச்சையானது சட்டவிரோதமானது அடிப்படை உரிமைகளை பறிப்பது என நீதிமன்றம் உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக பதில் அளிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் டில்லி மற்றும் உத்தர பிரதேச அரசு இரு மாநில போலீசாருக்கு உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE