சென்னை:யானைகளை, தனியார் மற்றும் கோவில்களில் சொந்தமாக வைத்து பராமரிப்பதை தடுக்கும் வகையில், கொள்கை வகுக்கும்படி, தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
ஸ்ரீரங்கம் ஆண்டாள் மற்றும் லட்சுமி யானைகளை பராமரிக்க, ஏற்கனவே பாகனாக இருந்த, ஸ்ரீதரன், வெங்கடேஷன் ஆகியோரை நியமிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த, 27 ஆண்டுகளாக பணியாற்றி வந்த பாகனை, பணியில் இருந்து அகற்றியதாகவும், கோவில் யானைகள் பாதுகாப்பு குறித்து, அறிக்கை அளிக்கவும் கோரப்பட்டது.
இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு பிறப்பித்த இடைக்கால உத்தரவு:எதிர்காலத்தில் தனியார் மற்றும் கோவில்களில்,யானைகளை சொந்தமாக வைத்திருப்பதை தடை செய்யும் வகையிலும், வனத்துறை மட்டுமே, யானைகளை பராமரிக்கும் வகையிலும், அரசு கொள்கை வகுக்க வேண்டும்.
யானைகளை துன்புறுத்தாமல், நன்றாக பராமரிப்பதை உறுதி செய்யும் வகையில், வனத் துறை ஒரு செயல் திட்டத்தை வகுக்க வேண்டும். யானை உள்ளிட்ட எந்த மிருகங்களையும், துன்புறுத்துவோருக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நிபுணர்களுடன் ஆலோசித்து, யானைகள் மறுவாழ்வுக்கான வழிமுறைகளையும் தெரிவிக்க வேண்டும். விலங்குகளை எந்த வகையிலும் மனிதர்கள் துன்புறுத்தக்கூடாது.
ஏற்கனவே விதிகள் இருந்தால், அதை ஏன் பின்பற்றவில்லை என்பதற்கும் பதில் அளிக்க வேண்டும்.விசாரணை, எட்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE