மதுரை:மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, மதுரையில் சிலை அமைக்க அனுமதித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
மதுரை மாவட்டம், நடுமுதலைக்குளம் உக்கரபாண்டியன் தாக்கல் செய்த பொதுநல மனு: முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை, மதுரையில் அமைக்க அனுமதிக்கக் கோரி, தி.மு.க., சார்பில் உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம், 'மனுவை தகுதிஅடிப்படையில், அரசுத் தரப்பில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து, உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டது.
மதுரை, சிம்மக்கல்லில் கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதித்து, வருவாய்த் துறை, 2020 டிச., 11ல் அரசாணை வெளியிட்டது. இப்பகுதியில் தியாகி சத்தியமூர்த்தி சிலைமற்றும் சிவன், செல்லத்தம்மன் கோவில்கள் உள்ளன.தேர்தலில் தி.மு.க.,வினர் வெற்றி பெற்றால், அக்கட்சியினர், தங்கள் வலிமையைக் காண்பிக்க, சிலைக்கு மாலை அணிவிக்க கூடுவர்.
எந்த ஒரு அரசியல் கட்சியானாலும் கூட்டம் சேர்க்க, மது அருந்துவது, பிரியாணி வழங்குவது வாடிக்கையாகவுள்ளது. அவர்கள், கோவில் பகுதியில் வாந்தி எடுக்க மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம்கிடையாது.ஆன்மிக பகுதியான சிம்மக்கல்லில் கருணாநிதி சிலையால், பக்தர்கள், கடவுள் மறுப்பாளர்கள் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலை அனுமதித்த வருவாய்த் துறையின் அரசாணைக்கு தடைவிதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, உக்கரபாண்டியன் மனு செய்தார்.
நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு, 'இதுபோன்ற மற்றொரு வழக்குடன் இவ்வழக்கையும் சேர்த்து, இன்று விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்' என, உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE