கோவை:உக்கடம் மேம்பாலத்தை ஆத்துப்பாலம் வரை நீட்டிக்க, கரும்புக்கடையில் துளையிட்டு, துாண் கட்டும் வேலை துவங்கியுள்ளது. இருப்பினும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர, 2023, ஜூன் மாதமாகி விடும்.கோவை, உக்கடம் முதல் கரும்புக்கடை வரை, ரூ.233 கோடியில், 1.46 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது; பஸ் ஸ்டாண்ட் முன், பேரூர் பைபாஸில் இறங்கு தளம் மட்டும் கட்ட வேண்டியுள்ளது.கரும்புக்கடையில் பாலம் முடிந்தால், வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருக்காது என சுட்டிக்காட்டியதால், ஆத்துப்பாலம் வரை நீட்டிக்கப்பட்டது.கூடுதலாக ரூ.265.44 கோடி ஒதுக்கி, ஆத்துப்பாலத்தை கடந்து பொள்ளாச்சி ரோட்டிலும், பாலக்காடு ரோட்டிலும் இறங்கும் வகையில் பாலம் வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது.கரும்புக்கடை முதல் ஆத்துப்பாலம் வரை நான்கு வழிப்பாதையாகவும், பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலையில் ஏறுதளம்/ இறங்கு தளம், இரு வழிப்பாதையாக அமையும்.பாலத்தின் இருபுறமும், 7 மீட்டர் அகலத்தில் அணுகு சாலை, 1.50 மீட்டர் அகலத்தில் நடைபாதையுடன் கூடிய வடிகால் கட்டப்படும்.பாலம் நீட்டிப்பாக, 72 தாங்கு துாண்கள், 63 இணைப்பு கான்கிரீட் ஓடுதளங்கள் அமைக்கப்படும். 1,076 மீட்டர் நீளத்துக்கு அணுகுசாலை போடப்படும். 7,164 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கிறது.சட்டசபை தேர்தல் காரணமாக, நிலம் கையகப்படுத்தும் வேலை தற்போது நடக்க வாய்ப்பில்லாததால், பாலம் நீட்டிப்பு வேலையை ஒப்பந்த நிறுவனம் துவக்கி விட்டது.30 மாதங்களுக்குள் பணியை முடிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதாவது, 2023ம் ஆண்டு, ஜூன் வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.எவ்வித இடையூறும் ஏற்படாவிட்டால், குறிப்பிட்ட காலத்துக்குள் வேலை முடியும்; இல்லையெனில், 2023 இறுதியாகி விடும் என்கின்றனர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.பஸ் ஸ்டாண்ட் கடைகளை இடித்துத்தள்ள முடிவுமாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வாலாங்குளம் பைபாஸில் வரும் வாகனங்கள் பாலத்தில் ஏறும் வகையிலும், வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. பஸ்கள் வெளியேறும் பகுதியில் உள்ள கடைகளை இடிக்க வேண்டும். பஸ் ஸ்டாண்டுக்குள் இன்னும் இரு துாண்கள் கட்ட வேண்டும். உயரழுத்த மின் கோபுரங்களை அகற்றிய பின், அதற்கான வேலைகள் துவங்கும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE