அன்னூர்:தூய்மை பாரத இயக்கத்தின் கீழ், வட்டார அளவில், சுகாதார ஊக்குனர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு, அன்னூர் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், 21 ஊராட்சிகளில் இருந்து சுகாதார ஊக்குனர்கள் பங்கேற்றனர்.அவர்களுக்கு, தூய்மைத் தமிழகம் செயலியை பயன்படுத்துவது குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டது.முதன்மை பயிற்சியாளர் கலாமணி பேசியதாவது:ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கழிப்பறை பயன்பாடு மிக முக்கியம். நான்கு அடி நீளமும், மூன்று அடி அகலமும் உள்ள உறிஞ்சி கழிப்பறை கட்டுவதற்கு, 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும். இது ஒரு சிறந்த முதலீடு. கழிப்பறையை உபயோகிக்கும் குடும்பம், ஆண்டுக்கு குறைந்தபட்சம், 50,000 ரூபாய் சேமிக்கிறது என ஆய்வு கூறுகிறது.கழிப்பறை பயன்பாடு, நோயற்ற வாழ்வுக்கு அடிப்படை. திறந்த வெளியில் மலம் கழிப்பதால், ரத்தசோகை, வயிற்றுப்போக்கு, குடற்புழு ஆகியவை உருவாகும். நோய் பாதிப்பு ஏற்படும். திறந்தவெளியில் கிடக்கும் மலத்தில் அமரும் ஈக்கள், பூச்சிகள், அவற்றை அப்பகுதி முழுக்க பரப்பும்.ஒவ்வொருவரும், தங்கள் ஊராட்சியில் கட்டப்பட்ட தனிநபர் கழிப்பறைகள், முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா என, பார்க்கவேண்டும். திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தினால், ஏற்படும் பாதிப்பு குறித்து, அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.கழிப்பறையை, ஆசிட், பினாயில், சோப்பு, பவுடர் ஆகியவற்றை பயன்படுத்தி சுத்தப்படுத்த கூடாது. சீயக்காய், சாம்பல், உப்பு, கோலமாவு, ஆகியவற்றை பயன்படுத்தி துடைப்பத்தால் கழுவி சுத்தம் செய்யலாம். கழிப்பறையை பயன்படுத்திய பிறகு, கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். இதுகுறித்து அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.ஒன்றிய பயிற்றுனர் தனலட்சுமி, பிளாஸ்டிக் மறுசுழற்சி, நீர் பயன்பாடு, குப்பைகளை தரம் பிரித்தல் குறித்து பயிற்சி அளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE