புதுடில்லி :இந்தாண்டு இறுதியில் நடக்கும், 'பிரிக்ஸ்' மாநாட்டுக்கான தேதியே இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதற்குள், இதில் பங்கேற்க, சீன அதிபர் ஷீ ஜிங்பிங் வர உள்ளதாக தகவல் பரவியது, நம் வெளியுறவுத் துறைக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒத்துழைப்பு
இந்தியா - சீனா இடையே, எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. எல்லையில், இரு நாட்டுப் படைகளும், 10 மாதங்களாக குவிக்கப்பட்டுள்ளன. பாங்காங் சோ பகுதியில் இருந்து மட்டுமே, படைகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் இருந்தும் விலக்கி கொள்வது குறித்து பேச்சு நடக்கிறது. இந்தப் பிரச்னையால், இரு நாட்டுக்கும் இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென்ஆப்ரிக்கா அடங்கிய, 'பிரிக்ஸ்' அமைப்பின் இந்தாண்டுக்கான தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. 'இந்த ஆண்டு இந்தியா நடத்த உள்ள பிரிக்ஸ் மாநாட்டுக்கு முழு ஒத்துழைப்பைத் தருவோம்' என, சீனா வெளியுறவுத் துறை திடீரென
கூறியுள்ளது. அதனால், இந்தாண்டு மாநாட்டில் பங்கேற்க, சீன அதிபர் ஷீ ஜிங்பிங் இந்தியாவுக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாயின.இது குறித்து, நம் வெளியுறவுத் துறை உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:எல்லையில் ஒரு பகுதியில் இருந்து மட்டுமே படைகளை சீனா விலக்கியுள்ளது. எல்லைப் பிரச்னை வேறு, மற்ற பிரச்னை வேறு என, சீனா கூறி வருகிறது.ஆனால், எல்லைப் பிரச்னைக்கு முழுமையான தீர்வு காணப்படாதவரை, மற்ற விவகாரங்களை எடுத்துக் கொள்ள இந்தியா தயாராக இல்லை.இந்தாண்டு பிரிக்ஸ் மாநாட்டுக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
'வீடியோ கான்பரன்ஸ்'
மேலும், நேரடியாக நடத்துவதா அல்லது வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடத்துவதா என்பதும் முடிவு செய்யப்படவில்லை. கொரோனா வைரஸ் பரவல் உள்ளதால், பல நாடுகளின் தலைவர்கள் இதுவரை வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளவில்லை.பிரிக்ஸ் மாநாட்டுக்கு தேதியே முடிவு செய்யாத நிலையில், சீன அதிபர் இந்தியா வரவுள்ளதாக கூறப்படுவது ஆச்சரியத்தை அளிக்கிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE