சென்னை:சட்டசபையில் இருந்து, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
சட்டசபை கூட்டம், நேற்று காலை, 11:00 மணிக்கு துவங்கியது. காலை, 10:57க்கு, முதல்வரும், துணை முதல்வரும் பட்ஜெட் உரையுடன் சபைக்கு வந்தனர். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்; எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சபைக்கு வரவில்லை.
கூட்டம் துவங்கியதும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து பேச வாய்ப்பு தரும்படி கேட்டார். சபாநாயகர் அனுமதி தரவில்லை. பட்ஜெட்டை தாக்கல் செய்யும்படி, துணை முதல்வருக்கு உத்தரவிட்டார். அவரும் எழுந்து பட்ஜெட் உரையை வாசிக்க துவங்கினார்.
துரைமுருகன், பேச வாய்ப்பு தரும்படி தொடர்ந்து கேட்க, சபாநாயகர் தரவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எழுந்து நின்று, 'இடைக்கால பட்ஜெட், கருப்பு பட்ஜெட்' என, கோஷம் எழுப்பினர்.துரைமுருகன் எழுதி வைத்திருந்ததை எடுத்து படித்தார். பின், சபையிலிருந்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார்.
தி.மு.க., - காங்., - முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.,க்களும் வெளிநடப்பு செய்தனர். தி.மு.க.,வில் இருந்து பா.ஜ.,விற்கு சென்ற, தி.மு.க., - எம்.எல்.ஏ., - கு.க.செல்வமும், சபையிலிருந்து வெளியேறினார். காலை, 11:05க்கு பட்ஜெட் உரையை வாசிக்க துவங்கிய துணை முதல்வர்பன்னீர்செல்வம் மதியம், 1:33க்கு நிறைவு செய்தார்.
அவருக்கு, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.பட்ஜெட் தாக்கல் செய்த பின், கூட்டம் நிறைவடைந்தது. இன்று சட்டசபை கூட்டம் கிடையாது. நாளை காலை, 10:00 மணிக்கு, சட்டசபை கூடும் என, சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE