கோவை ராம் நகரில், 1933ம் ஆண்டு கோவில் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின், 75 ஆண்டுகள் கழித்து, கோவில் முற்றிலும் புனரமைக்கப்பட்டு, இரண்டாவது முறையாக 2008ம் ஆண்டு பிப்., 18ல், மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 13 ஆண்டுகளுக்கு பின் இன்று மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.கோவிலில் பிரதானமாக அமைந்துள்ள ராஜகோபுரத்துக்கு, சுதை வேலை பார்த்து, வண்ணச்சாந்து பூசி, அழகு மிளிர காட்சியளிக்கிறது. கோபுர கலசங்களும் புதுப்பிக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அதே போன்று ஸ்ரீ சீதாலட்சுமண சமேத கோதண்டராமர், ஸ்ரீவிநாயகர் சன்னிதி, ஸ்ரீநவக்கிரஹ சன்னிதி, ஸ்ரீவில்வலிங்கேஸ்வரர், ஸ்ரீஆஞ்சநேயர் சன்னதிகளில் மராமத்துப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வர்ணம் பூசப்பட்டன.அந்தந்த சன்னதிகளின் கருவறையின் மேற்பகுதியில் கும்பஸ்தாபனங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. சன்னதிகளின் உள்பிரகாரம், வெளிப்பிரகாரம், மேற்பகுதி உட்பட அனைத்து பகுதிகளிலும் வர்ணம் பூசி அழகுபடுத்தப்பட்டுள்ளன.தெற்கு பார்த்து ஐந்து நிலைகளில் கோபுரம் அமைந்துள்ளது. கோபுர வாயிலுக்கு வடக்கில் கொடிமரமும், அதை கடந்து, தெற்கு பார்த்து சீதா லட்சுமண சமேத கோதண்டராமராக காட்சியளிக்கிறார்.கிழக்கு பார்த்து ஸ்ரீ விநாயகர் சன்னதியும், அதற்கு அருகே, வடக்கு பார்த்து ஆஞ்சநேயர் சன்னதியும் அமைந்துள்ளது. வடகிழக்கில் நவக்கிரஹ சன்னதி அமைந்துள்ளது.ராமர் சன்னிதிக்கு பின் பகுதியில் கிழக்கு பார்த்து ஸ்ரீ வில்வலிங்கேஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த இந்த சன்னதிகளுக்கு கிழக்கு பகுதியில், அபிநவ வித்யாதீர்த்த பிரவசன்ன மண்டபம் அமைந்துள்ளன. இங்கு கோவில் சார்பில் நாட்டியம், நடனம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் மண்டபத்துக்கு தெற்கே கோவில் அலுவலகமும், தென் கிழக்கில் மடப்பள்ளி அறையும் அமைந்துள்ளன. கோவிலின் அனைத்துப்பகுதிகளும் புனருத்தாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE