ராம்நகரில் ஸ்ரீ சீதா லட்சுமண சமேத ஸ்ரீ கோதண்டராமருக்கு, இன்று ஜீர்ணோதாரண மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.கோவை ராம்நகரில், 90 ஆண்டுகள் பழமையான கோதண்ட ராம சுவாமி தேவஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள, ஸ்ரீ சீதா லட்சுமண சமேத ஸ்ரீ கோதண்டராமர், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ வில்வலிங்கேஸ்வரர் மற்றும் நவகிரஹ சன்னதிகளுக்கு, ஜீர்ணோதாரண மஹா கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.அதன்படி, பிப்., 21 அன்று, காலை 9:00 மணிக்கு மங்கள இசையுடன், ஒன்பது கலச திருமஞ்சனம், வேதபாராயணம், பிரபந்த பாராயணம், சாந்தி ஹோமம் நிவேதனம் ஆகியவை முதற்கால யாகசாலை பூஜைகள் துவங்கின. மாலை 4:00 மணிக்கு ராமர் சன்னிதியில், பகவத்பிரார்த்தனை, யஜமான சங்கல்பம், அனுக்ஞை யஜமான புண்யாஹவாசனம் (புனிதநீர் தெளித்தல்), புத்துமண் எடுத்தல், கங்கனநுால் கட்டுதல், முளைப்பாரி இடுதல், வேத, பிரபந்த இதிகாச, புராணம் துவங்கியது.அதே நேரத்தில், ஆஞ்சநேயர் மற்றும் விநாயகர் வில்வலிங்கேஸ்வரர், நவகிரஹ சன்னதிகளிலும் யாகசாலை பூஜைகள் துவங்கியது. பிப்., 22ல், காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. பிற்பகல் 3:00 மணிக்கு, கோபுரகலசங்கள், விமானகலசங்களுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தன. மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன.பிப்.,23 அன்று காலை 8:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள், பிற்பகல் 2:30 மணிக்கு சப்த தச கலசம் (17 கலசங்கள்) திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றன. மாலை 5:00 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள், இரவு 8:30 மணிக்கு, மஹா சயனாதிவாசம் நடந்தன.இன்று காலை (பிப்., 24) 4:00 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. 5:00 மகா பூர்ணாஹூதி, 5:30 மணிக்கு பூர்ணகும்பம் புறப்படுதல், காலை 6:00 மணியிலிருந்து 7:30க்குள் அனைத்து சன்னதி மூர்த்திகளுக்கும், ராஜகோபுர விமான கலசங்களுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.மாலை 5:00 மணிக்கு பெருமாள் வீதி உலா, புஷ்பஅலங்காரம், நாமசங்கீர்த்தனம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, 48 நாட்கள் தொடர்ந்து மண்டல பூஜையும், ஆன்மிக சொற்பொழிவு மற்றும் நாட்டிய நிகழ்வுகளுக்கும், கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE