சென்னை:பிரதமர் மற்றும் கவர்னர் பெயரை பயன்படுத்தி, அட்டூழியம் செய்து வந்த கும்பல், மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு அனுமதி பெற்றுத் தருவதாக, ராமர் பிள்ளையிடம் பண மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்தவர் மகாதேவன், 55. இவரது மகன், அங்கிட், 29. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்தவர் ஓம், 45. இவர்கள், சென்னை, தி.நகரில், வேலை வாய்ப்பு அலுவலகம் நடத்தினர். பிரதமர் மற்றும் தமிழக கவர்னரின் பெயரை பயன்படுத்தி, பண மோசடியிலும் ஈடுபட்டு வந்தனர்.
மத்திய அரசு பணிகளுக்கான டெண்டர் பெற்றுத் தருவதாக, துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரிடம், முன் பணமாக, 18 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்து உள்ளனர். சென்னையை சேர்ந்த ஒருவரிடம், லஞ்ச வழக்கில் இருந்து விடுவிக்க, சி.பி.ஐ., இயக்குனர் போல சிபாரிசு கடிதம் வழங்கி, 1 கோடி ரூபாய் வசூலித்துள்ளனர். அதேபோல, முக்கியபுள்ளிகளுக்கு, பா.ஜ.,வில், ராஜ்யசபா எம்.பி., 'சீட்' பெற்றுத் தருவதாகவும் மோசடி செய்துள்ளனர்.
இது குறித்து, கவர்னர் அலுவலகம் புகார் அளித்ததை அடுத்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார், மகாதேவன் உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்து, ஆறு நாட்கள் காவலில் விசாரித்தனர். இவர்கள், 100 கோடி ரூபாய் வரை சுருட்டியது தெரியவந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், மம்சாபுரத்தைச் சேர்ந்த ராமர் பிள்ளைக்கு, மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு அனுமதி பெற்றுத் தருவதாகவும் மோசடி செய்துள்ளனர். இதற்காக பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசுவது போல, மத்தியஅரசு அதிகாரிகளை மிரட்டியதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் முறைகேடாக வாங்கி குவித்துள்ள சொத்துக்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. ராமர் பிள்ளையிடமும் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE