சென்னை:தகுதி இல்லாதவர்களுக்கு, புயல் நிவாரணம் வழங்கியதாக கூறப்படும் புகார் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும், தவறு செய்தவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
நாகை மாவட்டம், சீர்காழி தாலுகாவை சேர்ந்த, மீராராணி தாக்கல் செய்த மனு:இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட அழிவுக்காக, விவசாயிகளுக்கு நிவாரண தொகையை அரசு அறிவித்தது.
பயனாளிகளுக்கு இந்த அறிவிப்பை சரிவர தெரிவிக்கவில்லை. அதனால், இந்த வாய்ப்பை சிலர் பயன்படுத்தி கொண்டனர்.சீர்காழி தாலுகா, ரதநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த நிலம் இல்லாத சிலர், மோசடியாக சிட்டா, அடங்கல் சான்றிதழ் தயாரித்து, லட்சக்கணக்கில் நிவாரணம் பெற்றனர்.
இதுகுறித்து தெரிந்த பின், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு மனு அனுப்பினேன்; எந்த பதிலும் இல்லை. எனவே, என் மனுவை விசாரித்து, மோசடியாக பெற்றவர்களிடம் இருந்து, பணத்தை வசூலிக்க வேண்டும். உண்மையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நிவாரணத்தை வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் விஜயேந்திரன், அரசு தரப்பில், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகினர்.மனுவுக்கு, 10 வாரங்களில் பதில் அளிக்க, மத்திய, மாநில அரசுக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. மனுதாரரின் மனுவை ஆராய்ந்து, அறிக்கை தாக்கல் செய்யவும், தவறு செய்தவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE