சென்னை:''தமிழகத்தில், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி தான், மீண்டும் ஆட்சியை பிடிக்கும்,'' என, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தார்.
நிறைவேறும்
தமிழக சமூக நலத் துறை அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்திய பின், அவர் அளித்த பேட்டி: மத்திய அரசின், 'ஜன் தன்' திட்டத்தில், இதுவரை, 41.79 கோடி வங்கி கணக்கு துவக்கப்பட்டு, ஒரு லட்சத்து, 37 ஆயிரத்து, 426 கோடி ரூபாய் வங்கியில் செலுத்தப்பட்டு உள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும், 1.11 கோடி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு, 2,865 கோடி ரூபாய் வங்கியில் உள்ளது. இதே போல, இலவச காஸ் வழங்கும் திட்டத்தில், எட்டு கோடிக்கும் அதிகமான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் வருவாயை உயர்த்தவே, மத்திய அரசு, மூன்று வேளாண் சட்டங்களை இயற்றி உள்ளது. எனவே, விவசாயிகள் தங்களின் போராட்டத்தை, உடனடியாக கைவிட வேண்டும். தேவைக்கேற்ப இந்த சட்டங்களில் திருத்தம் செய்ய, மத்திய அரசு தயாராக உள்ளது. அதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு தந்து, ஆலோசனை நடத்த முன் வர வேண்டும்.தமிழகத்தில், அ.தி.மு.க., சிறப்பான ஆட்சி நடத்துகிறது. தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., கூட்டணி வைக்கிறது.
கடிதம்
இந்த கூட்டணி வெற்றி பெறும்; முன்னாள் முதல்வர் ஜெ.,யின் கனவு நிச்சயம் நிறைவேறும். தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் மாநிலங்களில், தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க.,வுடன் சசிகலா, தினகரன் இணைய வேண்டும். இந்த ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பை, ஜாதி வாரியாக நடத்த வேண்டும் என, பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்.இவ்வாறு, ராம்தாஸ் அதவாலே கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE