புதுடில்லி:டில்லி எல்லையில், போலீசார் ஒட்டியுள்ள போஸ்டர்களுக்கு, விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளன.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, டில்லி எல்லைகளில் ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களின் விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள், 90 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு, 11 முறை பேச்சு நடத்தியும் தீர்வு ஏற்டவில்லை.
வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்பதில், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பிடிவாதமாக இருப்பதால், போராட்டம் நீடிக்கிறது.இந்நிலையில், விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, டில்லியின் திக்ரி எல்லைப் பகுதியில், போலீஸ் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
அதில், 'திக்ரி பகுதியிலிருந்து விவசாயிகள் வெளியேற வேண்டும்' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.இந்த போஸ்டர்களுக்கு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான, 'சம்யுக்த கிசான் மோர்ச்சா' கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது பற்றி, அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 'திக்ரி எல்லையில், போலீசார் ஒட்டியுள்ள போஸ்டர்களும், அதில் விடுக்கப்பட்ட எச்சரிக்கையும், கண்டனத்துக்குரியது. 'வேளாண் சட்டங்களுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை, இதனால் முடக்க முடியாது' என, தெரிவித்துள்ளது.போலீசார் கூறுகையில், 'இது, வழக்கமாக ஒட்டப்படும் போஸ்டர் தான். போராட்ட களத்திலிருந்து வெளியேற, விவசாயிகளுக்கு நாங்கள் எந்த கெடுவும் விதிக்கவில்லை' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE