திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே ஓடும் லாரியில் பெயின்ட் டப்பாக்கள் திருடிய மதுரையை சேர்ந்த நால்வரை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
மதுரை வாடிப்பட்டி சங்கர் கணேஷ். இவர் கோவையில் இருந்து மதுரைக்கு லாரியில் பெயின்ட் டப்பாக்கள் ஏற்றி வந்து கொண்டிருந்தார். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே லாரி பின்புறம் ஏறியவர் பெயின்ட் டப்பாக்களை திருடி பின்தொடர்ந்த வேனுக்கு மாற்றினார். கண்ணாடி வழியாக பார்த்த சங்கர் கணேஷ் லாரியை நிறுத்தினார்.
திருட்டு கும்பல் கத்தியை காட்டி மிரட்டியதால் அவர் ஓடி மறைந்து கொண்டார். 100ஐ தொடர்பு கொண்டு உதவி கோரினார். விளாம்பட்டி ரோந்து போலீஸ் எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.போலீசாரை கண்டவுடன் பெயின்ட் டப்பா திருட்டில் பிஸியாக இருந்தவர்கள் ஓடினர். போலீசார் விரட்டியதில் கீழே விழுந்து ஆடை கறையோடு வந்தவரை கைது செய்தனர்.
அவரது தகவலில் செம்பட்டி வழியாக தப்ப முயன்ற மற்ற மூவரையும் மடக்கி கைது செய்தனர். விசாரணையில் மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை கேப்டன் பிரபாகரன் 25, அர்ச்சுனன் 21, நாகமலை 20, முத்துமேலத்தெரு வீரமணி 21, என்பது தெரியவந்தது. பெயின்ட் டப்பாக்கள், வேன் பறிமுதலானது. சம்பவம் நடந்த சில மணிநேரத்தில் திருடர்களை பிடித்த போலீசாரை எஸ்.பி., ரவளிப்பிரியா பாராட்டினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE